Saturday, August 4, 2012

இலங்கையில் சில முன்னேற்றம், ஆனால் பல தேவைகள். UN

இலங்கையில் போருக்கு பிறகான முன்னேற்றம் பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐ நாவின் ஒரு உயரதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

போர் முடிந்து மூன்று ஆண்டுகளில் வடகிழக்கில் இலங்கையின் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் செயல்திட்ட இயக்குநர் ஜான் கிங் (John Ging), அங்கு இன்னும் செய்யப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன எனக் கூறுகிறார்.

பல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னரான காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் இலங்கையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், இன்னமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும், மீளக் குடியேறியவர்களின் நிலையும் அதே போன்று மோசமாகவே உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது எனவும் ஜான் கிங் கூறுகிறார்.

பெரும் நிதியுதவிகள் தேவை

வடகிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு அரசால் மீளக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப கூடுதலான உதவிகள் தேவைப்படுகின்றன எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

போரினால் வாழ்க்கையை இழந்த மக்கள் மீண்டும் கௌரவாக வாழ்ந்து தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப ஐ நாவின் தமது அலுவலகமும், இதர சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் இலங்கை அரசுடன் இணைந்து வேலை செய்ய விரும்புவதாகக் கூறும் அவர் வட பகுதியில் மக்கள் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.
"சர்வதேச நிதியுதவிகள் 80 சதவீதம் குறைந்துள்ளது மக்களை துன்பத்துக்குள் தள்ளியிருக்கிறது"

எனவே இப்படியான நிலையில் மீளக்குடியமர்ந்தவர்கள் தங்களது தற்போதைய நிலை குறித்து திருப்தி அடைய முடியாது, அவர்கள் திருப்தி அடையக் கூடாது, நாமும் திருப்தி அடையக் கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலை மாறி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்றால், கொடையாளி நாடுகள் தமது உதவிகள் மற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் ஐ நா வின் தமது அலுவலகம் கோருகிறது எனவும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

வட மாகாண மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதியுதவியில் 20 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் சர்வதேச நிதியுதவியில் 80 சதவீதம் குறைந்த நிலையில், அதன் காரணமாக மக்கள் பெரும் துன்பத்தை தேவையில்லாமல் எதிர்கொள்கிறார்கள் என்றும் ஜான் கிங் கூறினார்.

எனினும் அரசிடம் சில செயல்திட்டங்கள் இருக்கின்றன எனவும் அவை நடைமுறைபடுத்தப்படும் என்கிற நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி பிபிசி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com