Sunday, August 12, 2012

புலம்பெயர்ந்துள்ள புலிகளின் எச்சசொச்சங்கள் தீயநோக்குடன் பிரச்சாரம் செய்கின்றன. ஜனாதிபதி.

டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தியிதழுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அளித்த செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தியா சீன இடையே சிக்கியுள்ள இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை தொடர்பாக மிகவும் விலாவாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். செவ்வியின் முழுவடிவம்.

2009 மேயில் முடிவுக்கு வந்த யுத்தம் நல்லதொரு தேசிய மீளிணைவுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு என்று இரு நாடுகளும் கூறின. 18 மாத பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு யார் காரணம் என கருதுகீறீர்கள்?

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு விரும்பும் வேறு எவருடனும்  பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு நாம் எப்போதும் தயார். ஆனால், அனைத்து கலந்துரையாடல்களையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நடத்தலாம் என திட்டவட்டமாக நாம் கூறியுள்ளோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் த.தே.கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும்'

உங்கள் வெளிவிவகார அமைச்சர் 2011 மே மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இருநாடுகளாலும் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் தீர்வுப் பொதியானது உண்மையான நல்லிணக்கத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை வலியுறுத்துவதானது இப்பிரச்சினை தொடர்பான  உங்கள் அரசாங்கத்தின் மற்றொரு இழுத்தடிப்பாக இந்தியாவினால் பார்க்கப்படுகிறது?

உங்கள் கேள்வியில் நீங்கள் பதிலை அளித்துள்ளீர்கள்.  13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உண்மையான நல்லிணக்கத்துக்கான சூழல் தொடர்பான 2011 மே கூட்டறிக்கையை நீங்கள் குறிப்பிட்டீர்கள். அதைத்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக நாம் அடைய விரும்புகிறோம். செயற்படும் ஜனநாயகத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.  நாடாளுமன்றமே அதியுயர் சட்டமியற்றும் சபை. தமிழ் தேசியக்கூட்டமைப்புடனோ  வேறு யாருடனோ நாம் என்ன பேசினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால்தான் மேலும் உண்மையான செயற்படக்கூடிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக் கூடாக தீர்வொன்றைக் காண்பது சிறந்தது என நாம் கருதுகிறோம்

இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் சகல கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பற்ற வேண்டும் வெளிநாட்டுத் தீர்வு மற்றும் அழுத்தத்தில் தங்கியிருக்கக் கூடாது என்று கூறினீர்கள். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழர் தேசியகூட்டமைப்பு தலைவர்கள் கூறியிருக்கும் போது உங்களின் 13 வது திருத்தம் பற்றிய கருத்துக்களில் இந்தியா திருப்திப் படத்தவில்லையல்லவா?

13 வது திருத்தம் பற்றிய எமது கருத்துக்கள் அலைக்கழிப்பதானது என்று கூறுவதில் நியாயல்லை. ஐக்கிய இலங்கைக்குள் த.தே.கூ தீர்வைக் காண விரும்புவது எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால், அவர்களது அண்மைய மட்டக்ளப்பு கூட்டத்தில் கூறிய கருத்துகள் எல்ரிரிஈ அழுத்தத்திலான அவர்களது பழைய நிகழ்ச்சி நிரலாகவே தென்படுகின்றது. அது தெளிவு படுத்தப்பட வேண்டும். அது ஜனநாயக அணுகுமுறை என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட எல்எல்ஆர்சி 2002-2009 கிடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதான குற்றச்சாட்டுகள் பற்றி ஆராய்ந்து முன்னேற்றமான பரிந்துரைகளைச் செய்துள்ளது. ஆனால், உங்கள் அரசாங்கம் சிறிதளவே முன் நகர்ந்துள்ள. ஏன் இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை?

இது நிலைமையை பிழையாக புரிந்து கொண்டதாகும். யுத்தம் முடிந்த ஓராண்டுக்குப் பிறகு மே 2010 ல் நாங்கள் எல்எல்ஆர்சியை நியமித்தோம். கடந்த நவம்பரிலும் திசம்பரிலும் அது தனது அறிக்கையைச் சர்ப்பித்தது. ஒரு மாத்ததில் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிரதிகள் உலகெங்கும் கிடைக்கச் செய்துள்ளோம். எல்எல்ஆர்சி அறிக்கையின் 9 வது அத்தியாயத்தில் காணப்படும் 285 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க நவடிக்கைத் திட்டமொன்றினைத் தயாரிக்க ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் ஒரு பணிநோக்கு அமைப்பு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டது. அதன் நடவடிக்கைத் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஊடகங்களில் அது கிடைக்கின்றது. அவற்றுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கின்றோம் ,அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். நீதியை மீள நிலை நாட்டுவதற்காவே எல்எல்ஆர்சி அமைக்கப்பட்டது. அழிப்பதற்கு அல்ல.

வடக்கில் இராணுவமயத்தை நீக்குவதற்கு போதுமானளவு நீங்கள் ஏன் செயற்படவில்லை. அத்துடன் உங்கள் படையினரில் ஏறத்தாழ 70 சதவீதமானோர் வடக்கில் இன்னும் நிலைகொண்டுள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், காணாமல் போனவர்களின் பட்டியல், வடக்கில் தேர்தல் தொடர்பாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

எமது ஆயுதப் படையினரில் 70 சதவீதமானோர் வடக்கில் நிலைகொண்டுள்ளதாக கூறுவது, எல்.ரி.ரி.ஈ. எச்சசொச்சங்களின், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீயநோக்கம் கொண்ட பிரச்சாரமாகும். அது நிச்சயமாக உண்மையல்ல. பயங்கரவாதிகளால் மூன்று தசாப்தங்களாக நடத்தப்பட்ட கொடிய ஆயுதமோதலிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். வடக்கிலுள்ள படையினரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறோம். 2009 டிசெம்பரில் யாழ்ப்பாணத்தில் எமது படையினரின் எண்ணிக்கை 27,000 ஆக இருந்தது. இவ்வருடம் ஜுன் மாதம் இந்த எண்ணிக்கை 15,000 ஆகும். இதை இராணுவ மயப்படுத்தலுக்கான அறிகுறியாக பார்ப்பது கடினம். வடக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை நீங்கள் அறியவில்லை என நம்புகிறேன். வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அவர்கள் வகிக்கும் பாத்திரத்தை நீங்கள் ஏன் பார்க்கவில்லை. வடக்கில் ஒளித்துவைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படுவது உங்களுக்குத் தெரியாதா? அத்துடன் வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குலகில் வாழும் எல்.ரி.ரி.ஈ.ஆதரவு குழுக்கள் வன்முறையை தூண்டுவதை நீங்கள் அறியவில்லையா? நன்கு நிதியளிக்கப்பட்ட இந்த குழுக்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கடந்த முப்பது வருடகால அனுபவத்தை கருத்திற்கொண்டு, எச்சரிக்கையாக இருப்பதற்கு நாம் உரித்துடையவர்கள் இல்லையா? இந்த ஆயுதப் படை உறுப்பினர்கள் இல்லையாயின் யுத்தத்தின் பின்னரான பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்க மாட்டா என்பதை நான் வலியுறுத்த வேண்டும்

இந்திய மக்களவை எதிக்கட்சித் தலைவர் சுஷ்மா சிவராஜ் பாராளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்திருந்த போது கூறினார் இந்தியாவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அவற்றுடன் முழு இந்நிய மக்களுமே ஒரு அரசியல் தீர்வை விரும்புகிறார்கள் என்று. மீளிணக்கப்பாட்டுச் செயற்பாடுகள் முன்னேற்றம் குறைவு என்று கருத்துக் கூறினார். உங்கள் நாட்டில் நடைபெறுபவை இந்தியாவின் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் உணர்வலைகளை ஏற்படுத்துவதை உங்கள் அரசாங்கம் உணர்கின்றதா?.

கௌரவ சுஷ்மா சிவராஜுடன் நல்ல கருத்துப் பரிமாறலை மேற்கொண்டேன். தங்களது பல அலுவல்களுக்கிடையில் முழு இந்திய மக்களும் இலங்கையில் அரசியல் தீர்வில் அக்கறை கொள்கிறார்கள். இலங்கை மக்களும் அவ்வாறே. அவரின் ஊடக கருத்துக்கள் உற்சாக மளிப்பதாக இல்லை. நாங்கள் மீளிணக்கப்பாட்டை நோக்கிச் செல்கின்றோம். தமிழ் மொழியை நிர்வாகத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர். குடிசார் பாதுகாப்புப் படையில் அவ்வாறே. பல தமிழர்கள் ஆயுதப் படைகளில் சேர விரும்புகிறார்கள். இவைகள் யாவும் மீளிணக்கப்பாட்டின் அம்சங்கள்தான். இந்தியாவின் உணர்வலைகளை எங்கள் அரசாங்கம் நன்கறியும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை காயப்படுத்தியதா, இந்தியா ஏன் அதை செய்தது என நீங்கள் கருதுகிறீர்கள்?

என்னால் சொல்ல முடிந்தது என்னவென்றால், நாம் உணர்வுகளற்ற  நாடோ மக்களோ அல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொதுவான கலாசார மற்றும் வரலாற்று பெறுமானங்கள் உள்ளன. எனவே இத்தகைய நடவடிக்கையால் நாம் ஆழமாக உணர்ச்சியடைகிறோம். ஆனால் எமது நட்பையும் சிறந்த உறவுகளையும் இது மாற்றவில்லை. எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பரிமாணம் மாறவில்லை என நான் நம்புகிறேன். அப்படியானதை (மாற்றத்தை) இந்திய பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட முக்கிய அதிகாரிகளின் விஜயங்கள் வெளிப்படுத்தவில்லை. இலங்கையின் நிலைப்பாடாக இருந்தது என்னவென்றால், எமது அபிவிருத்திக்கு தடையாக இருந்த நீண்டகால மோதலால் ஏற்பட்ட இப்பிரச்சினைகளை தீர்க்க எமக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே.

பிரேரணைக்கு இந்தியா  ஆதரவளித்தபோதிலும் உண்மையில், அப்பிரேரணையில் பயன்படுத்தப்படும் மொழிப்பிரயோகத்தை நீக்கச் செய்து, அது அத்துமீறாததாகவும் அது கண்காணிப்பு பொறிமுறையாக இல்லாதிருப்பதையும் உறுதிப்படுத்துவதில் பிரதமர் மன்மோகன் சிங் ஆர்வம்கொண்டிருந்தார். அத்துடன், இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் அமெரிக்கா செல்வாக்குச் செலுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்களா?

அப்பிரேரணைக்கு அப்பால் செல்வது நல்லது என எண்ணுகிறேன். அது நடந்து முடிந்துவிட்டது. எந்த நல்ல நோக்கங்களும் நடவடிக்கைகளும் எப்போதும் பாராட்டத்தக்கது. ஆனால், இந்தியா எமக்கு ஆதரவாக நின்று, மேலும் நேரமும் இடமும் வழங்கப்பட வேண்டும்  என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால், அவ்வாறான பிரேரணையே இல்லாமல் இருந்திருக்கும். இப்பிராந்தியமானது இந்தியாவை நோக்குகிறது.  இந்தியா தனது அயல்நாடுகளுடனான விவகாரங்களை கையாளும்போது தான் செய்வது சரியானதா தவறானதா என ஆராய வேண்டும்..

சீனாவுடனான  கொழும்பின் நெருக்கம் அதிகரிப்பது குறித்து இந்திய அமைப்புகளிடையே கவலைகள் ஏற்பட்டுள்ளது இது பற்றி என்ன கூறுகிறீர்கள் ?

அணிசேரா நாடொன்றாக தொடர்ந்தும் இருப்பதில் இலங்கை முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. 'பழைய அதிகார கூட்டுகள் இல்லாதபோதிலும் அணி சேரா கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும். அத்துடன் புதிய பூகோள அரசியல் யதார்த்தங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு இந்தியா குறிப்பிடத்தக்க முக்கியமானதொரு நிலமாகும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டவாறு சீனாவுடனான உறவு அதிகரித்துவருகிறது என இந்திய அமைப்புகளிடையே இருக்கக்கூடிய கவலை ஆதாரமற்றதாகும். ஆனாலும் இலங்கையில் சீன முதலீடு அதிகரித்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் வர்த்தக பரிமாற்றங்கள். மூன்று தசாப்த யுத்தகாலத்தில் நாம் இழந்த அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பற்றிக்கொள்ளவும் குறைந்த செலவிலான நிதி மூலங்களை நாம் தேடிக்கொள்ளவும் வேண்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மாத்திரமல்லாமல் கொழும்பு துறைமுகத்திலும், வீதிகள், ரயில்வே, மின்னுற்பத்தி நிலையங்கள் என்பவற்றிலும் சீனா அண்மையில் முதலீடுகளை செய்துள்ளது. இது இந்தியாவின் இயற்கையான செல்வாக்கை குறைப்பதற்காக இது மேற்கொள்ளப்படுகின்றது என கருதுகின்றது. தங்களின் கருத்து என்ன ?

சீனாவின் அண்மைக்கால முதலீடுகளானவை ஐ.நா. மனித உரிமை பேரவை வாக்கெடுப்புக்கு வெகு முன்னராகநடந்தவை. காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றை இந்தியா மீள்நிர்மாணம் செய்கிறது. சம்பூர் அனல் மின் நிலையத்தில் இந்தியா முதலீடு  செய்கிறது வடக்கிலும் தெற்கிலும் ரயில்வே நிர்மாண நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கு பூகோள ரீதியான கேள்விப்பத்திரம் கோரப்பட்டு ஹொங்கொங்கை தளமாக கொண்ட நிறுவனமொன்று அதில் வென்றது. அந்த ஒப்பந்தத்தை சீனாவுக்கு இலங்கை வழங்கியது என்பது தவறானது. இந்தியாவும் கேள்வி மனுக்கோரலில் பங்குபற்றியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. உலகின்மிக கொடிய பயங்கரவாதிகளுடன் நாம் போரிட்டபோது, எமக்கான ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் எமக்கு சிறந்த நிபந்தனைகளில் வழங்க தயாராகவிருந்த சட்டபூர்வமான அமைப்புகளிடமிருந்து நாம் வாங்க வேண்டியிருந்தது. இப்பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை பாதிக்கும் வகையில் இலங்கை எதையும் செய்வதற்கு காரணம் இல்லை.

இந்த வலயத்தில் எண்ணெய் மற்றும் வளிமம் (gas) ஆராய்ச்சி நடாத்த நீங்கள் அனுமதி அளித்தது பற்றிய இந்தியாவின் கவலை தொடர்பான உங்களின் பதில் என்ன ? சீனா எற்கனவே பல எண்ணெய் ஆய்வுக் கப்பல்களை இந்த வலயத்தில் இயங்கச் செய்துள்ளதே.

எங்களது எரிசக்தித் தேவைப்பாடு அதிகரிக்கின்றது. எங்கள் சமுத்திர வலயத்தில் எண்ணெய் கிடைத்தால் பெரிய மகிழ்ச்சியானதாகும். இந்த வலயத்தில் மற்றவர்கள் எண்ணெய் ஆய்வு செய்ய விடுவதில் இந்தியாவுக்கு ஏன் கவலை என்று எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிறுவனம் இந்தியாவிலும் பெருமளவு செய்து கொண்டிருக்கிறது. மன்னார் வடிநில எண்ணெய் ஆய்வை முதலில் இந்தியாவுக்குத்தான் கொடுத்தோம் என்பதை மறக்கலாகாது. பிறகு கவலைபட என்ன இருக்கின்றது.

இந்தியாவும் இலங்கையும்தான் 90 களில் முதன் முதலாக தென்னாசியாவில் சுதந்திர வர்த்தக உடனபடிக்கையைச் செய்த நாடுகள். முழுமையான பொருளாதார பங்குடைமை உடன்படிக்கை (CEPA) இன்னும் செயற்பாட்டுக்கு வராதது புதுமையாக இருக்கின்றது. நீங்கள் மனம் மாறுவதற்குக் காத்திருக்கின்றது இந்தியா. முன்னெடுத்துச் செல்வதில் உங்களுக்குள்ள தடைகள் எவை ?

அது சரியான மதிப்பீடு என்று நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலமாக கலந்துரையாடல்கள் நடந்து கொணடிருக்கின்றன. சில சிக்கலான பிரச்சினைகளும் அதில் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு சிறிது காலம் எடுக்கும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தராது. தற்போது எழாத ஆனால் பிறகு எழுக்கூடிய பல விடயங்கள் அதில் இருக்கின்றன. அவற்றை ஆழமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும் அப்போதுதான் எந்த ஒப்பந்தமும் இருபக்கமும் நன்மை தரும்.

இந்திய இறக்குமதிப் பொருட்களைக் குறைப்பதற்கான சில பேச்சுக்கள் இடம் பெற்றனவா ?

இது தொடர்பாக குறிப்பாக இந்தியாவைப் பொறுத்து உத்தியோக மட்டத்திலான கொள்கை கிடையாது. இறக்குமதியைக் குறைக்க வேண்டும என்று எப்போதும் பேசப்படுகின்றது. மற்ற நாடுகளைப் போலவே இலங்கையும் இறக்குமதிக்கான மாற்றீடைத் தேடுகின்றது. இது இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. நாங்கள் இறக்குமதியை குறைக்க வேண்டும். நாங்கள் உற்பத்தி செய்யக் கூடியவற்றை இங்கு உற்பத்தியாக்க வேண்டும். இருபக்க நன்மைக்காக இந்தியா இதில் எமக்கு உதவ வேண்டும். இந்தியாவிலிருந்து மாத்திரம் இறக்குமதியைக் குறைக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை.

இந்தியாவின் இலங்கைக்கான கடன் ஒரு பில்லியன் டொலராக இருக்கின்றது. அத்துடன் வடக்கு கிழக்கில் பாரிய கட்டுமான வேலைகள் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு அப்பால் அது மானியமாகவும் உதவியாகவும் 350 மில்லியன் டொலர் கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல எண்ணத்தோடு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்டு கபிலவஸ்து புனித பண்டத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்துள்ளது.. புவியியல் ரீதியாக, ஆகக் குறைந்தது மிகவும் குறிப்பிடத்தக்க அயலான் என்ற வகையில், இந்தியா, இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்குப் போதுமானவற்றைச் செய்திருக்கின்றது என்று நினைக்கின்றீர்களா ?

இந்தியா மிகப் பெரிய பங்கினைச் செய்திருக்கிறது. இலங்கையில் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்கான இந்தியாவின் பங்களிப்பு ஏராளம். கபிலவஸ்து புனித பண்டத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தற்கு இலங்கை மிகவும் உயர்வாக அதனை மதிக்கின்றது. எனது கடைசி இந்திய விஜயத்தின் போது கலா. மன்மோகன்சிங்கிடம் நான் விடுத்த வேண்டுகோள் பலனளித்துள்ளது. புத்த மத்தின் ஊடாக எமது நூற்றாண்டுகால உறவை இது கோடிட்டுக் காட்டுகின்றது. அபிவிருத்தி மற்றும் மீளிணக்கப்பாட்டினை நாங்கள் முன்னெடுத்தச் செல்வதற்கு இந்தியாவின் கட்டுமானங்களும் உதவிகளும் மிகவும் உற்சாகத்தைத் தந்தன. இவையெல்லாம், உங்களின் சொந்த வார்த்தைகளில் சொல்லப் போனால், இந்தியா எங்களின் மிக நெருங்கிய மற்றும் குறிப்பிடத்தக்க உறவினர் என்பதை வலியுறுத்துகின்றது எனலாம்.

இலங்கைநெற் காக தமிழில் நேசன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com