Sunday, August 19, 2012

தூதரகத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்க அசாஞ்சுக்கு, ஈக்வடார் அதிபர் ஒப்புதல்

"விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், ஈக்வடார் நாட்டு தூதரகத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் வரை அவர் அங்கேயே தங்கியிருக்கலாம்' என ஈக்வடார் அதிபர் ரபேல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, சுவீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். சுவீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட் இவருக்கு, ஜாமின் வழங்கியது.

இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, சுவீடன் கோரியது. இதை எதிர்த்து, அசாஞ்ச் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் ஏழு நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள், அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, அசாஞ்ச், மேல் முறையீடு செய்தார். ஆனால், இவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, அசாஞ்சை கைது செய்து, சுவீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில், கடந்த, ஜூன் 19ம் தேதி தஞ்சம் புகுந்தார்.

இதுகுறித்து, அசாஞ்ச், முன்பு குறிப்பிடுகையில், "சுவீடனுக்கு என்னை நாடு கடத்தினால், அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக, எனக்கு, அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' என்றார். அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா, தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஈக்வடார் அதிபர் ஒப்புதல் அளித்தாலும், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தை விட்டு அசாஞ்ச் வெளியே வரும் போது அவர் கைது செய்யப்பட உள்ளார். இது குறித்து ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா குறிப்பிடுகையில், "கைது செய்யாமல், பாதுகாப்பாக வெளியேற்றும் காலம் வரை, அசாஞ்ச், தொடர்ந்து தூதரகத்தில் தங்கியிருக்கலாம்' என, தெரிவித்து உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com