Friday, August 31, 2012

த.தே.கூ வினர் பிச்சைக்காரன் உடம்பில் உள்ள புண் போன்றவர்கள். குமுறுகின்றார் கருணா.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிச்சைக்காரனின் உடம்பில் உள்ள புண் போன்றவர்கள். அதனை பெருப்பித்து பெருப் பித்து பிச்சைக்காரன் பிச்சை யெடுப்பது போல தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இங்கு அரசியல் செய்துகொண்டுள்ளனர் என மட்டக்களப்பு பிள்ளையாரடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய பிரதி அமைச்சர் கருணா எனப்படுகின்ற முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் நாங்கள் காட்டில் ஆயுதம் தூக்கிப்போராடியபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எங்கிருந்தார்கள். பல்வேறு நாடுகளில் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு இங்கு வந்து மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் ஒருபோதும் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாது.

நான் தமிழ் மக்களுக்காக போராடச்சென்றவன். எனக்கு அவர்களுக்கு இருக்கும் உணர்வைவிட அதிகமாக இருக்கும். நான் இந்த நாட்டைவிட்டுச்சென்று சொகுசாக வாழ்ந்திருக்கமுடியும். ஆனால் நான் அவ்வாறு வாழவிரும்பவில்லை.
 
எமது இனம் தொடந்து அழிவுகளை சந்தித்துக்கொண்டிருக்கமுடியாது என்பதற்காகவே நான் போராட்ட முறையில் இருந்து அரசியல் முறைக்குள் பிரவேசித்தேன்.
 
அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களிடமும் இந்த போராட்டத்தை வெல்லமுடியாது.நடைபெறும் பேச்சுவார்த்தையினைக்கொண்டு பெறக்கூடிய அதிகாரத்தைப்பெற்று நாங்கள் அரசியல் ரீதியாக உரிமையை பெற முயற்சிப்போம் என்று கூறினேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று என்ன நடந்துள்ளது. அவர் அன்று அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று முதலமைச்சர் நிலையில் அவர் இருந்திருப்பார்.
 
நான் போராட்டத்தின் கொள்கையை மாற்றக்கூறவில்லை.போராட்ட வடிவத்தை மாற்றி நாங்கள் முயற்சிகளை செய்வோம் என்றே கூறினேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அதில் இருந்து பிரிந்துவந்துடன் கிழக்கின் போராளிகள் 6000 பேரினையும் வீட்டுக்கு அனுப்பி அவர்களின் உயிர்களையும் காப்பற்றியுள்ளேன்
 
இன்று மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழு இலங்கையுமே அமைதியாகவுள்ளது. முன்பு காலையில் எழும்பும்போது அழுகுரல்களும் சடலங்களையுமே நாங்கள் காணுவோம். அந்த நிலைமை இன்று இல்லை. அதனை மீண்டும் ஒரு தடைவ கொண்டுவர நாங்கள் அனுமதிக்ககூடாது.
 
கிழக்கு மாகாண தேர்தலை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் இதில் நாங்கள் மிகவும் ஒன்றுபட்ட சக்தியாக வாக்களிக்கவேண்டும். நாங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே எமது சமூகத்தினை முன்கொண்டுசெல்லமுடியும். இதனை உணர்ந்த மக்களாக நாங்கள் மாறவேண்டும்.
 
மக்கள் இந்த தேர்தல் தொடர்பில் தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும்.இன்னும் கூட்டமைப்பினரின் பொய்ப்பிரசாரங்களுக்கு மயங்கும் சமூகமாக இருந்தால் நாங்கள் இன்னும் பல வருடங்களுக்கு பின் செல்லவேண்டிய நிலையே உருவாகும்.
 
நாங்கள் எம்மத்தியில் உள்ள சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்யவேண்டும். கடந்த காலங்களில் இருந்தவர்களினால் எமது மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் தமது பலத்தை பயன்படுத்த தெரியாதவர்களாகவே இருந்தனர். அவர்களால் எதுவித பிரயோசனமும் இல்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com