Monday, August 27, 2012

தந்தை, தாய், தங்கையை கொலைசெய்துவிட்டு சடலங்களுடன் ஒரு இரவை கழித்த கொலையாளி

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்த எனக்கு பெரும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்காக வருமானத்திற்கு அப்பால் கடன் பெற்றேன். கடன்தொல்லையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா,அப்பாவிடம் பணம் கேட்டேன். அவர்களும் தரவில்லை. இவ்வாறான நிலையிலேயே அவர்களுக்கும் தங்கைக்கும் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து வில்லைகளை கொடுத்தேன்.

அதில் அம்மா இறந்து விட்டார். அதனை அறிந்து நான் அம்மா அணிந்திருந்த தாலிக் கொடியை கழற்றி அடகு வைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன் என்று வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபரான மகன் பிரசான் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரிடம் பொலிஸார் 3 மணிநேரம் விசாரணைகளை நடத்திய போதிலும் அவர் ஒருசொட்டு கண்ணீரையேனும் சிந்தவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், தாய், தந்தை, மற்றும் தங்கை ஆகிய மூவரையும் படுகொலை செய்த சந்தேகநபரான பிரசான் மூவரும் கொலையுண்டதன் பின்னர் தாயின் தாலிக்கொடி அடங்கலாக சடலங்களில் இருந்த சகல நகைகளையும் கழற்றி அவற்றை அடகு வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறித்த சந்தேக நபர் யோகட்டில் தூக்க மாத்திரையினை கலந்து கொடுக்கவில்லையெனவும் மில்க்சேக் பழச்சாற்றுடன் கலந்தே தாய், தந்தை மற்றும் தங்கை ஆகிய மூவரையும் கொலை செய்ததாகவும் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். சந்தேக நபரான பிரசான் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள பழச்சாறு பானங்கள் விற்பனை நிலையமொன்றிலிருந்து கடந்த 14 ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று இரவு மில்க்சேக் பழச்சாறு பானத்தை வாங்கிக் கொண்டு சென்றதாகவும், அதிலேயே தூளாக்கப்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து மூவருக்கும் கொடுத்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

முதலில் பானத்தை அப்பாவுக்கும் பின்னர் அம்மாவுக்கும் கொடுத்துள்ளார். அந்த சமயம் தங்கை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். தங்கை குளித்து விட்டு வந்ததும் அவளுக்காக வைத்திருந்த மில்க்சேக்கை அப்பா எடுத்து கொடுத்துள்ளார். தங்கையும் அதனை முழுமையாக குடித்துள்ளார்.

அதன் பின்னர் சந்தேகநபர் தாயின் கழுத்திலிருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சகல தங்க ஆபரணங்களையும் கழற்றியதுடன், தங்கையின் கழுத்து மற்றும் காதுகளில் இருந்து நகைகளையும் கழட்டியெடுத்துக் கொண்டு மூவரையும் ஒரே கட்டிலில் வரிசையாக கிடக்கச் செய்து விட்டு தானும் சிறிதளவு தூக்க மாத்திரை கலந்த பழச்சாற்றினை அருந்திவிட்டு அன்றைய பொழுதை சடலங்களுடனேயே கழித்துள்ளார்.

அடுத்த நாள் 15 ம் திகதி விழித்தெழுந்த சந்தேகநபர் அன்று மாலை கொழும்பில் சில பகுதிகளில் சுற்றித்திரிந்ததுடன் காதலியை சந்தித்து கதைத்தும் உள்ளார். அதனைத் தொடர்ந்து கொழும்பு ஹோட்டல் ஒன்றில் அன்றைய பொழுதை கழித்துள்ளார்.

அதன் பின்னர் அடுத்த நாளான 16 ம் திகதி மீண்டும் கொட்டகலை ராணியப்புத் தோட்டத்துக்குச் சென்று பிரசான் அங்கிருந்து மேலும் சில நகைகளையும் வங்கிப்புத்தகங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வந்துள்ளார். இவ்வாறு கொழும்புக்கு வந்த பிரசான் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள பிரபலமான நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றில் சகல நகைகளையும் அடகு வைத்து விட்டு 17 ம் திகதி வெள்ளிக்கிழமையன்று கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியுள்ளார்.

குறித்த ஹோட்டலில் இரண்டு நாள் தங்குவதற்காக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்ட அவர் அந்த ஹோட்டலில் ஒரு நாளே தங்கியுள்ளார். பின்னர் 18 ம் திகதி பதுளைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கொழும்பு வந்துள்ளார்.

இவ்வாறு பல இடங்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்த அவர் 20 ம் 21 ம் திகதிகளில் பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளார். இவ்வாறு பல இடங்களுக்கும் மாறி மாறி பயணம் செய்து கொண்டிருந்த நிலையிலேயே கடந்த 24 ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சந்தேக நபர் கடவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com