Thursday, August 2, 2012

புலம்பெயர் தமிழ் மக்களே வாழவைக்கும் மண்ணை மதித்து நடவுங்கள்! சி.தம்பையா-கனடா

ஓவ்வொரு வருடமும் ஜூலை முதலாம் திகதியை கனடியர்கள் 'கனடா தின'மாக (கனடாவின் தேசிய தினம்) பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவது வழமை. இந்த உன்னதமான தினத்தை கனடாவின் பெரும்பான்மை வெள்ளை இன மக்கள் மட்டுமின்றி, வந்தேறு குடிகளான 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களும் உவகையுடன் கொண்டாடுவர்.

கனடாவில் குடியேறியுள்ள பிற நாட்டு மக்களின் தொகை வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இலங்கைத் தமிழர்களும் (ஏறத்தாழ மூன்று இலட்சம்) அடங்குகிறார்கள். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு வெளியே அவர்கள் கூடுதலான தொகையில் வாழும் நாடு கனடாதான். அவர்களைப் பொறுத்தவரையில் கனடா அவர்களது இரண்டாவது தாயகம் என்றுகூடப் பெருமையாகச் சொல்லிக்கொள்வர்.

இலங்கையில் அவர்கள் யுத்தம் காரணமாக அனுபவித்த பயம் சூழ்ந்த வாழ்க்கையை கனடாவில் மருந்துக்கும் அனுபவிக்கவில்லை. அதுமாத்திரமின்றி அவர்களில் பலர் தம் வாழ்நாளில் அனுபவித்திராதது மட்டுமின்றி, கண்டும் கேட்டுமிராத பொருளாதாரச் செழிப்புமிக்க வாழ்க்கைiயுயும் அனுபவிக்கின்றனர். அவர்களது தேட்டத்தில் இலங்கையில் இருக்கும் உறவுகளும் வாழுகின்றனர். இத்தகைய ஒரு வாழ்க்கையைத் தந்ததிற்காக கனேடிய நாட்டுக்கு இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்றி செலுத்த வேண்டும்.

ஆனால் மாறாக நமது சமூகம் என்ன செய்கிறது? கனேடியத் தமிழர்கள் சமூக வாழ்வில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் முக்கியமான மூன்று துறையினர். முதலாவது இங்குள்ள வர்த்தக நிறுவனங்கள். இரண்டாவது புற்றீசல் போல் இலங்கையிலுள்ள கோவில்களுக்கு பிரதிகளாக இங்கு தோன்றியுள்ள கோவில்கள். மூன்றாவது இருபதுக்கு மேற்பட்ட பத்திரிகைகளையும் உள்ளடக்கிய அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள். இந்த மூன்று துறையினரையும் பொறுத்தவரையில் எத்தனை ஊடகங்களில் கனடா தினத்தையொட்டி சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன அல்லது நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளன? எத்தனை கோவில்களில் கனடா தினத்தையொட்டி பூசை வழிபாடுகள் நடந்துள்ளன?

இது ஒருபுறமிருக்க, கனடா தினத்தன்று தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தபோது அதிர்ச்சிதான் கிடைத்தது. இவ்வருடம் கனடா தினம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்ததால், அடுத்த நாள் ஜூலை 2ம் திகதி திங்கட்கிழமையை கனேடிய அரசாங்கம் பொது விடுமுறை தினமாக அறிவித்தது. அன்றைய தினம் கனடாவிலுள்ள அரசாங்க, தனியார் காரியாலயங்கள் நிறுவனங்கள் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்களும் (உணவு விடுதிகள் நீங்கலாக) திறக்கப்படவில்லை.

ஆனால் இங்குள்ள தமிழ் வர்த்தக நிறுவனங்கள் மட்டும் அதற்கு எதிர்மாறாக நடந்து கொண்டன. தமிழர்கள் நடாத்தும் உணவு விடுதிகள் மட்டுமின்றி, பெரும்பாலான பலசரக்குக் கடைகள், புடவைக் கடைகள், நகைக்கடைகள், அழகு சாதனக் கடைகள், வீடியோ கடைகள், எலக்ரோனிக் கடைகள், ஸ்ரூடியோக்கள், அச்சகங்கள, சலூன்கள் என அத்தனையையும் திறந்து வைத்து வியாபாரம் செய்தனர்.

இது திட்டமிட்டு கனடாவின் தேசிய தினத்தை அவமதிப்பதற்காக செய்த செயல் என்று நான் சொல்ல வரவில்லை. மற்ற நாட்டவர்கள் தமது வர்த்தக நிறுவனங்களைத் திறக்காத போது தாம் மட்டும் திறந்து வியாபாரம் செய்து நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
'தவிச்ச முயல் அடிக்கும்' மனோபாவமே இதற்குக் காரணம்.

அதேநேரத்தில் புலிகள் கோலோச்சிய காலத்தில் எப்படி இலங்கையில் அவர்களது ஆதிக்கப் பகுதிகளில் தமது மாவீரர் தினம், திலீபன் நினைவு தினம், கரும் புலிகள் தினம், அன்னை பூபதி தினம் போன்ற முக்கிய தினங்களில் மருந்து வாங்க முடியாமல், தேநீர் குடிக்க முடியாமல் மருந்துக் கடைகளையும், தேநிர்க்கடைகளையும் கூட பலவந்தமாகப் பூட்ட வைப்பார்களோ, அதேபோல கனடாவிலும் கடந்த காலங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்களைப் பூட்ட வைத்து வந்துள்ளனர். அவ்வாறு பூட்ட மறுப்பவர்களின் கடைகளை இலங்கையில் மட்டுமின்றிக் கனடாவிலும் தாக்கிச் சேதப்படுத்தியும் உள்ளனர். புலிகளுக்குப் பயந்து 'இனப்பற்றை'யும் 'தமிழ் பற்றை'யும் வெளிப்படுத்திய கனடிய தமிழ் வர்த்தகர்கள் தங்களையும், தங்கள் சந்ததியினரையும் வாழ வைக்கும் புனித பூமியான கனடாவின் தேசிய தினத்தன்றாவது தமது கடைகளைப் பூட்டி கனடிய மண்ணுக்கு மதிப்பளித்தால் என்ன?

பிறந்த பொன் நாடான இலங்கையைத்தான் மதிக்கிறீர்கள் இல்லை. புகுந்த பொன் விளையும் பூமியான கனடாவையாவது மதியுங்கள். குறைந்த பட்சம் அடுத்த வருடம் கனடா தினத்திலாவது உங்கள் கனடிய விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள். இதை நடைமுறைப்படுத்துவதற்கு கனடாவில் முன்னணியில் நிற்கும் அதிபர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், சமூக சேவகர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் முன்வந்து உழைக்க வேண்டும்.

கனடாவில் நான் குடியேறிய ஏழு வருடங்களில் அவதானித்ததை மனம் பொறுக்காமல் இங்கு குறித்துள்ளேன். நான் கேள்விப்பட்ட வரையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் இதே நிலைதான் என அறிகிறேன். எனவே எனதருமை தமிழ் மக்களே! உங்களை வாழ வைக்கும் நாடுகளை இனிமேலாவது மதித்து நடவுங்கள்.

சி.தம்பையா (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
ஸ்காபரோ (கனடா)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com