பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் பகிஷ்கரிப்பை தொடர் கின்றனர்.தமது கோரிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக கருத்திற் கொள்ளும் வரை தாம் கடமைக்குத் திரும்பப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், பரீட்சைகள் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சம்பளக் குளறுபடிகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத்தலைவர் ஆர்.எம்.சந்தரபால குறிப்பிட்டார்.
தங்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் செயலிழந்துள்ளதுடன், எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் விரிவுரைகள் இடம்பெறவில்லை என, பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத்தலைவர் தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய இணக்கப்பாடுகள் தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை நிறைவேற்றுவது குறித்து புதிய சுற்றுநிருபத்தை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
பெப்ரவரி மாதம் கையெழுத்திட இந்த உடன்படிக்கை மார்ச் 21 முதல் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அச்சங்கங்கள் கூறின.
இந்த உடன்படிக்கையின்படி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான சம்பளம் 11 சதவீதத்தால் அதிகரிக்கப்படவிருந்தது.
இதேவேளை,பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணி நிறுத்தத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்பட மாட்டாதென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதனால் உடனடியாக பணி நிறுத்தத்தை கைவிட்டு கடமைக்குத் திரும்புமாறு கல்விசாரா ஊழியர்களிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment