Saturday, May 5, 2012

சர்வதேச மருத்துவிச்சிகள் தினம் International Midwives Day – புன்னியாமீன்

ஒவ்வொரு மே மாதம் 05ஆம் திகதியும் சர்வதேச மருத்துவிச்சிகள் தினமாக International Midwives Day அனுஸ்டிக்கப்படுகிறது. பொதுவாக மருத்துவிச்சிகள் தினம் எனும்போது நவீன உலகில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் சமூகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய பிரிவினர் தொடர்பான நினைவூட்டல் தினமாகவே இது அமைகின்றது.

மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய், சேய் மரண வீதம் அதிகமாகும். இந்த தாய், சேய் மரண வீதத்தை கட்டுப்படுத்த மூன்றாம் உலக நாடுகள் கூடிய கரிசனைச் செலுத்த வேண்டுமென கடந்த சில தசாப்தங்களாகவே உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகின்றது.

அதேநேரத்தில் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் போன்ற சார்க் நாடுகள் இவ்விடயத்தில் கூடிய கரிசனைக் காட்டி வருவதின் காரணமாக அண்மைக்காலமாக தாய் சேய் மரண வீதம் இந்நாடுகளிலும் வெகுவாக குறைந்து வருவதை அவதானிக்கலாம். இச்செயற்றிட்டத்துக்கு அரசாங்கங்களும், சுகாதார அமைச்சுக்களும், சுகாதார நிறுவனங்களும் கூடிய பங்களிப்பினை வழங்கி வந்தாலும்கூட, இச்செயற்றிட்டத்தை நேரடியாக எடுத்துச் செல்வதில் மருத்துவிச்சிகள் என்றழைக்கப்பட்ட குடும்பநல உத்தியோகஸ்தர்களின் பங்களிப்பே முதன்மைப் பெற்றுள்ளது.

ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததிலிருந்து சிசுவைப் பிரசவிப்பதுவரை பிறந்த சிசு சுமார் ஐந்து வயதை அடையும் வரை இந்த குடும்பநல உத்தியோகஸ்தர்களின் நேரடிப் பராமரிப்பும், அவதானமும், ஆலோசனைகளும் விசாலமானவை. மருத்துவிச்சிகளின் சேவை மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இவர்களின் பணி உயரியதாகவே கருதப்படுகின்றது.

இந்த அடிப்படையில் 1987ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவிச்சிகள் மாநாட்டில் International Confederation of Midwives சர்வதேச ரீதியில் மருத்துவிச்சிகள் தினமொன்று பிரகடனப்படுத்தப்பட வேண்டியது மருத்துவிச்சிகளுக்கு சமூகத்தில் உயரிய இடம் வழங்கப்படுவதையும், கௌரவிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்தினம் அமைய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் விளைவாகவே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் 1991ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதியை சர்வதேச மருத்துவிச்சிகள் தினமாக International Midwives Day ஏற்றுக்கொண்டு தொடர்ச்சியாக அதனை ஒவ்வொரு மே மாதம் 05ஆம் திகதியும் அனுஸ்டித்து வருகின்றன. இன்று உலகில் பெரும்பாலான நாடுகள் இத்தினத்தை அனுஸ்டிப்பதை அவதானிக்கலாம்.

குடும்பநல உத்தியோகஸ்தர்களான மருத்துவிச்சிகள் பொதுவாக ஒரு தாய் கர்ப்பம் தரித்ததிலிருந்து பிரசவம் வரை சகல விடயங்களிலும் கர்ப்பினித் தாய்க்கு ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும், பராமரிப்பாளர்களாகவும், இருந்து வருகின்றனர். குறிப்பாக ஒரு கர்ப்பினித் தாயின் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப நிலை தொடர்பான விபரங்கள் போன்றவற்றை அவதானித்து கர்ப்பினிக்குரிய தேவையான ஆலோசனைகளை வழங்கி மேற்கொள்ளவேண்டிய வைத்தியப் பராமரிப்புக்கான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர்.

அதேபோல குழந்தை பிறந்ததும் மூன்றாம் உலக நாடுகளில் யுனிசெப்பின் ஆதரவுடன் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேடு பேணப்படுகின்றது. இந்த ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேடு குடும்நல உத்தியோகஸ்தர்களின் மூலமாகவே குழந்தை பிறந்ததிலிருந்து ஐந்தாண்டு காலம்வரை பராமரிக்கப்படுகின்றது. குறிப்பாக குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு பி.சீ.ஜி. தடுப்பூசி வைத்தியசாலையிலேயே ஏற்றப்படுகின்றது. பிரசவத்தின் பின் தாய் வீடு சென்ற பின்பு குடும்பநல உத்தியோகஸ்தர் தாயின் வீட்டுக்கு வந்து குழந்தையை பரிசோதித்து தேவையான அறிவுரைகளை வழங்குவார்.

குறிப்பாக தாய்ப் பாலூட்டுதல், தொப்புள்கொடி பராமரிப்பு, குழந்தையின் உளவிருத்தியைத் தூண்டுதல், ஆபத்தான அறிகுறிகள், குழந்தைக்கான தடுப்பூசி விபரங்கள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற விடயங்களும், குழந்தை 06 மாதங்கள் நிறைவடைந்ததும் குழந்தைக்கு உணவூட்டுதல், குழந்தை நோய்வாய்ப்படும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள், குழந்தையின் உள விருத்தியைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்குவார்.

பொதுவாக இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சுகாதார அமைச்சுக்களில் குடும்ப சுகாதார பணியகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன இத்தகைய நடவடிக்கைகளுக்கு பூரண அனுசரணையாளர்களாகவும், ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்து வருகின்றனர். மேலும் இந்த குடும்பநல உத்தியோகஸ்தர்கள் தொற்றுநோய்கள் பரவும் காலங்களில் கிராமங்கள் தோறும் சென்று அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவர். அத்துடன் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் மக்களை அறிவுறுத்தி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவர்.

பெரும்பாலான நாடுகளில் இன்று நகர, கிராமத்து வைத்தியசாலைகளுடன் இவர்களது பணி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அளவிடமுடியாத சேவைகளை வழங்கிவரும் மருத்துவிச்சிகளாகிய குடும்பநல உத்தியோகஸ்தர்களின் தொழில் அந்தஸ்தை அதிகரிக்கக்கூடிய வகையில் இவர்களுக்கு கூடிய வசதிகளைச் செய்து கொடுப்பதுடன், இன்றைய அரசாங்கங்கள் இது விடயத்தில் கூடிய கரிசனைக் காட்டுவதினூடாக சமூகத்துக்கு இவர்களின் தொண்டு எத்தகையது என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com