ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார்
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் சற்று முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியில் அழைத்துவரப்பட்டார்.
இதேவேளை, சரத் பொன்சேகா விடுலைசெய்யப்பட்டசெய்தி அறிந்த மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தவர். இவர் இலங்கை போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி இலங்கைக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்திருந்தார்.
நவம்பர் 16,2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ்விற்கு கடும் சவாலாக போட்டியிட்டிருந்தார்.
எனினும் சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி இரவு, கொழும்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இராணுவ தளபாட கொள்முதலில் முறைகேடு செய்ததாக சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் படி பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனை கடந்த மாதம் 26ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் அவருக்கு பிணை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 26ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் இந்த வழக்கின் இடையில் வெளரூசூ3021;ளைக்கொடி விவகாரம் பிறிதெரூசூ3006;ரு வழக்காக பொன்சேகாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்தது.
அதில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சிறைத்தண்டனை தொடர்பாக பொன்சேகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து ஒரு நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் பொன்சேகாவை விடுவித்து அவரை நிரபராதி என தீரப்பளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஏனைய இரண்டு நீதிபதிகளும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொன்சேகாவை குற்றவாளியென தீர்ப்பளித்து மூன்று வருட சிறைத்தண்டனை விதித்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தமது பிணை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சிறைத் தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மேற்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர், ஹைகோப் நிதி மோசடி வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை முற்றாக விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் மார்ச் 15ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
ஹெகோப் வழக்கில் மேல் நீதிமன்றில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இராணுவ நீதிமன்ற குற்றச்சாட்டுக்களோடு ஒத்துப்போவதாக தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ் தீர்ப்பினை வழங்கினார்.
இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஹைகோப் வழக்கு தேவையற்றது என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனால் ஒரே குற்றத்திற்கு இரு நீதிமன்றில் தீர்ப்பு வழங்க முடியாது என சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இக்கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி சுனில் ராஜபக்ஷ், ஹைகோப் வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை விடுவித்து தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி பொன்சேகாவை நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்வதாக உறுதி வழங்கினார் என அனோமா பொன்சேகா தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருந்தது.
இந்நிலையில், சரத் பொன்சேகா நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற வீரர்களை தன்னுடன் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தே அவர் விடுதலை செய்யப்ட்டார்.
இந்த நிலையில் சரத் பொன்சேகா தாக்கல் செய்த வெள்ளை கொடி வழக்கு, பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு போன்றவை தொடர்பில் மேன்முறையீடு இன்று வாபஸ் பெறப்பட்டது.
அதன் பின்னர் வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சரத் பொன்சேகா சற்று முன்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டு சாதாரண பிரஜையாக உலகின் மத்தியில் தோன்றினார்.
0 comments :
Post a Comment