Thursday, May 10, 2012

எலும்புத்துண்டு டக்ளசும் சிங்கக்கொடி சம்பந்தனும் சொற்சமர்! பாராளுமன்றில் அமளிதுமளி

நேற்றுப் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் டக்ளஸ் தேவானந் தாவுக்கும் மிடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இதனால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சிங்கக்கொடி சம்பந்தன் என டக்ளஸ் தேவானந்தாவும் எலும்புத்துண்டுக்கு அலையும் டக்ளஸ் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பேச்சை டக்ளஸ் தேவானந்தா அமைதியாகவிருந்து செவிமடுத்துக் கொண்டிருந்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் எனது அருமை நண்பர் என்று மட்டும் டக்ளஸ் தேவானந்தா ஒரு தடவை குறிப்பிட்டு பேசினார்.

ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றும்போது 'மாவை சேனாதிராஜா மாவிட்டபுரத்திலுள்ள தனது வீட்டுக்குப்போக முடியவில்லை. அது அதியுயர் பாதுகாப்பு வலயமாகவுள்ளது. நானும் ஒரு அகதிதான்' என்று இங்கு குறிப்பிட்டமை பொய்யென்றார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து அப்பகுதி விடுவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் அங்கிருந்த தனது வீட்டை மாவை சேனாதிராஜா எப்போதோ விற்று விட்டார் என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மாவை சேனாதிராசா டக்ளஸுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தமிழ்க் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் டக்ளஸுக்கு எதிராக கூச்சலிட்டனர்.

இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்களும் கேள்விக்கணைகளும் பறந்தன. சிங்கக்கொடி சம்பந்தன் என்றும் எலும்புத்துண்டு டக்ளஸ் என்றும் வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன.

உங்களால் இந்தியாவுக்கு போக முடியுமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டக்ளஸுக்கு சவால் விட்டபோது, தாராளமாக செல்வேன். எனக்கு இந்தியாவில் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு மட்டுமேயுள்ளது. கொலைக்குற்றச்சாட்டு இல்லை. உங்களின் தலைவர்கள் பிரபாகரன், உமாமகேஸ்வரன் இந்தியாவில் ஆயுதம் வைத்திருக்க வில்லையா? சுடுபடவில்லையா? நீங்கள் அத்தனைபேரும் ஆயுதம் வைத்திருந்தவர்கள் தானே? என்றார்.

அதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏதோ கூற, நீங்கள் மண்டையன் குழுவின் தலைவர்தானே. நீங்கள் அப்போதும் TNA(தமிழ்த் தேசிய இராணுவம்) இப்போதும் TNA(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) என்றார் டக்ளஸ். இதற்கு சுமந்திரன் எழுந்து நின்று ஏதோ கூற முற்பட்டபோது நீங்கள் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கு வாதாடுபவர்தானே. உங்கள் விளையாட்டுக்கள் எங்களுக்கும் தெரியும். பெண்கள் பாடசாலையில் என்ன நடந்தது என்றார் டக்ளஸ்.

அப்போது சம்பந்தன் குரலைச் செரும, டக்ளஸ் உரத்த குரலில் 'அனைவரும் கொஞ்சம் அமைதியாக இருங்கோ சிங்கக்கொடி சம்பந்தன் ஐயா ஏதோ கூற முற்படுகின்றார் என்னவென்று கேட்போம் என்று' கூறியபோது சம்பந்தன் சிரித்தவாறு எதுவும் பேசாமல் இருந்தார். டக்ளஸ் தொடர்ந்தும் பல தடவைகள் சிங்கக்கொடி சம்பந்தன் என்று அழைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் டக்ளஸுக்கும் நீண்ட நேரமாக கடும் தர்க்கம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது சபைக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அவர் சபையை கட்டுப்படுத்த பலமுறை முயன்றபோதும் அது முடியவில்லை. இறுதியில் சம்பந்தனிடம் உங்கள் உறுப்பினர்களை தயவு செய்து கட்டுப்படுத்துங்கள் என்று வலியுறுத்திய அவர் டக்ளஸையும் உரையை மட்டும் நிகழ்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியபோதும் அவை ஒழுங்குப்பிரச்சினையல்லவென சபைக்கு தலைமை தாங்கியவரால் நிராகரிக்கப்பட்டது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com