Friday, May 4, 2012

பிரித்தானிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை புலிகளுடன் தொடர்புபட்டவை. கோத்தபாய.

சிறுவர்களை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கும் ஸ்தாபனத்தின் தரவுகளை அடிப்படையாக கொண்டு பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலங்கையில் இன்னும் 600 சிறார்கள் வரை காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வறிக்கை தொடர்பாக கருத்துரைத்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வறிக்கையானது புலிகளுடன் தொடர்பு பட்டவை எனவும் அதற்கும் அரசிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் புலிகளால் பலாத்காரமாக தமது இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர் 2006 ஆம் ஆண்டு சிறுவர்கள் உட்பட்ட ஆண், பெண் என்று 30ஆயிரம் பேர் வரை புலிகளால் பலவந்தமாக துப்பாக்கி முனையிலேயே இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர் எனவும் இப்பலவந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் புலிகளின் உறுப்பினரும் தற்போது பிரித்தானியாவில் வசிப்பவருமான அடேல் பாலசிங்கமும் இணைந்து கொண்டிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தமது பிள்ளைகளை காணவில்லை என்று 676 முறைப்பாடுகள் யுனிசெப்புக்கு கிடைத்துள்ளன. இதில், 64 வீதமான முறைப்பாடுகள், புலிகளால் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாடுகளாகும்.

இந்த முறைப்பாட்டு அறிக்கை பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸிடமும் அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஒலரா ஒட்டுனு இலங்கைக்கு வந்தபோது அவரிடம் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில்லை என்று புலிகள் உறுதியளித்தனர். எனினும் அவர்கள் அந்த நடவடிக்கையை தொடர்ந்தனர்.

இதேவேளை, 2001 ஆண்டில் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின்போதும் சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பதற்கு புலிகளுக்கு வாய்ப்புகள் இருந்ததாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com