Monday, April 9, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ? ரவூப் ஹக்கீமா ? சந்திரகாந்தனா?

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமாயின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவது யார்? என்பது தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் தானே போட்டியிட போவதாகவும் அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஆலோசித்து வருகிறார் எனவும், ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் அரசுக்கான வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என அவர்களிடம் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்குரிய ஒருவராக ஹக்கீம் இருப்பதால், அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அவரை நிறுத்துவதே கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றுவதற்கான சரியான நகர்வாக அமையும் என ஜனாதிபதி கருதுகிறார். என தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை அறிந்த அரசுடன் இணைந்துள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள், முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை என அறியமுடிகின்றது.

இதேவேளை, ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென்ற ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே எனவும் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான சரியான நகர்வு இதுவென்றும் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமாயின் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் தானே போட்டியிட போவதாகவும் அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுமா? என்பது பற்றி எனக்கு இதுவரை எந்தத் தகவலும் அறியக்கிடைக்கவில்லை. எவரும் என்னுடன் அதைப்பற்றிப் பேசவுமில்லை. எனினும் மாகாணசபை கலைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். இப்போது முதலமைச்சராக நான் பணியாற்றுகிறேன். அடுத்த முறையும் போட்டியிடுவேன். இதில் வேறு கேள்விக்கே இடமில்லை என முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விடயம் தொடர்பில் ஏதாவது விட்டுக் கொடுப்பை மேற்கொள்வதா இல்லை என்பது குறித்த தனது நிலைப்பாட்டை தேர்தல் அறிவிக்கப்பட்டனர் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணசபை ஜூலை மாதமளவில் கலைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com