தம்புள்ளை பள்ளிவாசல் இன்று மீண்டும் திறக்கப்பட்டது
தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை பொலிஸாரினால் மீண்டும் திறக்கப்பட்டது. இன்று காலை தம்புள்ளை பள்ளிவாசளுக்கு நேரடியாக விஜயம் செய்த அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், ஏ.எச்.எம். பௌஷி ஆகியோர் பள்ளிவாசல் நிர்வாத்தினருடன் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்கள்.
பள்ளிவாசலின் அருகில் வசிக்கின்ற ஏனைய மதத்தைச் சகோதரர்களிடம் அமைச்சர்கள் இதுபற்றி விசாரித்தபோது பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
இந்தப் பள்ளிவாசலினால் எங்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் இல்லை. இப்பள்ளிவாசல் காலாகாலமாக இருந்து வருகிறது. நேற்று பள்ளிவாசலை தகர்ப்பதற்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளி இடங்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்களே' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் உரையாற்றிய வசந்த குமார நவரட்ண என்பவர் தான் 47 வருடங்களாக தம்புள்ளையில் வசிப்பதாகவும் இப்பள்ளிவாசல் அங்கிருப்பதை தனது சிறுவயது முதல் அறிந்திருந்ததாகவும் கூறினார்.
தம்புள்ளை மக்கள் இப்பள்ளிவாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 5 சதவீதமானோர் மாத்திரமே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களே. உள்ளூர் அரசியல்வாதிகள் இருவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தனர். புனித பிரதேசம் என்ற பெயரில் இங்குள்ள மக்களை வெளியேற்றுதற்கு திட்டமிடப்படுகிறது. அதற்காக பள்ளிவாசலை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றார்.
மக்களிடம் தான் கேட்டறிந்த கருத்துக்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என அமைச்சர் பௌஸி கூறினார். புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தின்போது பள்ளிவாசல் குறித்த ஏனைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment