கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டவர்கள் நாடு திரும்ப 10 தினங்கள் எடுக்கும் - உறவினர்கள் (படங்கள்)
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டு ஸ்பைன் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள மீனவர்களான தமது உறவினர்கள் நாடு திரும்ப பத்து தினங்கள் வரை எடுக்கும் என மீட்கப்பட்டுள்ளமீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தொலைபேசியூடாக அவர்களுடன் தொடர்பு கொண்ட போதே, அவர்கள் இதனை தெரிவித்ததாக, நீர்கொழும்பு பிட்டிபனை பிரதேசத்தில் வசிக்கும் கடத்தப்பட்ட இரண்டு மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி இலங்கை மீனவர்களான எஸ்.கே.கே. வீரசிறி, பெருமாள் செல்வராஜன்,வர்ணகுலசூரிய சாந்த செபஸ்தியான், தினேஷ் சுசந்த பெர்னாந்து, ஐூட் நிசாந்த பெர்னாந்து , வர்ணகுலசூரிய ஜேசுதாஸ் லியோன் ரொட்ரிகோ ஆகியோர் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டனர்.
இவர்கள் அறுவரும் 'நிமேஸாதுவ' என்ற பெயர் கொண்ட ரோலர் படகில் மீன்பிடிக்க சென்றபோதே கடத்தப்பட்டு 68 கோடி ரூபா (6 மில்லியன்டொலர்) கப்பம் கோரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை ஸ்பெயின் போர்க்கப்பல் கடந்த வாரம் மீட்டதுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களையும் கைது செய்திருந்தது.
நீர்கொழும்பு பிட்டிபனை பிரதேசத்தில் வசிக்கும் விடுவிக்கப்பட்ட வர்ணகுலசூரிய ஜேசுதாஸ் லியோன் ரொட்ரிகோ என்ற மீனவரின் மனைவி வத்சலா மற்றும் பெருமாள் செல்வராஜனின் மகள் நிலூகா பிரியதர்ஷனி ஆகியோர் இது தொடர்பாக தெரிவிக்கையில் ,
கடந்த ஆறு மாத காலமாக கடத்தப்பட்ட மீனவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர். ஒழுங்கான முறையில் உணவு வழங்கப்படவில்லை தினமும் ஓரிரண்டு ரொட்டிகளே உணவாக வழங்கப்பட்டுள்ளன. உப்பு நீரையே பருகக் கொடுத்துள்ளனர் . துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 68 கோடி ரூபா கப்பமாக தரப்படாவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்போது ஸ்பெயின் கடற்படைக்கு சொந்தமான கடற்படையினரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது எமது மீனவர்கள் கென்யாவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு நல்ல உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
நாடு திரும்ப 10 தினங்களாவது எடுக்கும் என அவர்கள் தொலைபேசியில் உரையாடும்போது தெரிவித்தனர்.
ஸ்பைன் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள எமது உறவினர்களை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்றனர்.
0 comments :
Post a Comment