Monday, March 19, 2012

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்களிக்கும் - மன்மோகன் சிங்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் நோக்குடன் இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடந்த மனித உரி்மைகள் மீறல், போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார்.

இந்திய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும்போதே அவர் இவ்வறிவிப்பை விடுத்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்.பிக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம். அதிமுக எம்.பி. தம்பித்துரை எழுந்து, பிரமதரின் பதில் நேரடியாக இல்லை என்று கண்டித்துப் பேசினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணையின் வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் தவிர்த்தால் அல்லது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தால் இந்திய மத்திய அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களை வாபஸ் பெறப் போவதாக திமுக எச்சரித்த பின்னணியில் மன்மோகன் சிங்கின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோக்சபாவிலுள்ள 18 திமுக எம்.பிகளின் ஆதரவானது பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் நிலைத்திருப்பதற்கு அவசியமாகவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com