தேவை ஏற்படின் தூதரகங்களில் உள்ள இராணுவ அதிகாரிகளை இராணுவ நீதி மன்று அழைக்கும்
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இராணுவ நீதிமன்றம் தேவை ஏற்பட்டால் இராஜதந்திரப் பதவிகளில் இருக்கும் படை அதிகாரிகளைக் கூட அழைத்து விசாரிக்கும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவத்தினுள் விசாரணைகளை மேற்கொள்ளப் படைத்துறைத் தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் தொடர்பாகக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறுீனார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினர் குற்றமிழைத்ததற்கான சான்றுகள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இது உட்பட படையினர் தொடர்பாக ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாகவே இராணுவத் தளபதியினால் நீதிமன்றமொன்று நியமிக்கப்பட்டது.
இந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவ நீதிமன்ற விசாரணை தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை அல்ல.
நல்லிணக்க ஆணைக்குழு ஏற்கனவே விரிவான விசாரணைகளையும் ஆராய்வுகளையும் மேற்கொண்டே அதன் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே சாட்சியமளித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று இல்லை.
எவ்வாறிருப்பினும் தேவையேற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட எவரையும் அழைத்து விசாரிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமையவே படையினர் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணைக்குத் தெரிவு செய்யப்படுவர் என்றார்.
0 comments :
Post a Comment