அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற செல்வோருக்கு ஒசுசலவில் இலவச மருந்து
அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்து சிட்டைகளுக்கு அரச ஒசுசல மருந்து விற்பனை நிலையங்களில் இலவசமாக மருந்துகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் சிபார்சின் படி வழங்கப்படும் மருந்து சிட்டைகளுக்கு நாட்டிலுள்ள அனைத்து ஒசுசலவிலும் இலவசமாக மருந்தை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் அரச வைத்தியசாலைகளினால் பரிந்துரை செய்யப்படும் நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை விலை கொடுத்து வாங்க தேவையில்லை.
உள்ளக மற்றும் உதவி வைத்தியர்களின் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அச்சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு சுகாதார அமைச்சு இணங்கியுள்ளது.
நிதி அமைச்சுடன் ஆலோசனை நடத்தப்படவேண்டிய கோரிக்கையொன்றை முன்வைத்து தொடர்ந்தும் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு ஒசுசல மூலம் இலவசமாக மருந்துகளை விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment