Tuesday, February 14, 2012

சட்டவிரோத றோலர் படகுகள் இரண்டு பள்ளிக்குடாவில் மடக்கிப்பிடிக்கப்பட்டன.

சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி றோலர் படகினைப் பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு றோலர் படகுகள் பள்ளிக்குடா பகுதி இராணுவத்தினர் உதவியுடன் கடற்றொழிலாளர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் பூநகரி பள்ளிக்குடாப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த றோலர் படகில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 4 கடற்றொழிலாளர்களும் படகோடு கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் றோலர் மூலமான கடற்றொழிலானது முற்றாக தடைசெய்யப்பட்டது இந்நிலையில் குருநகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரையில் றோலர் படகுகள் பாவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சட்டவிரோதமான றோலர் படகுகளை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சு தீர்மானித்ததன் அடிப்படையில் றோலர் படகுகளைப்பாவிப்போர் மீது கடற்றொழில் அமைச்சு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் இது உடனடியான கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆயினும் திருட்டுத்தனமாக இவ்வாறு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையிலேயே இவ்வாறு மடக்கிபிடிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com