Saturday, February 25, 2012

உழைக்கும் பெண்கள் முன்னணியின் அலுவலகம் கண்டியில் திறந்து வைக்கப்பட்டது.

உழைக்கும் பெண்கள் முன்னணியின் அலுவலகம் திறப்பு விழா இன்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூத்த பெண் தொழிற்சங்க செயற்பாட்டாளரான திருமதி சிவபாக்கியம் குமாரவேலு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பேராதனைப் கல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானப் பிரிவு பேராசிரியர் சிவகணேஷன் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ. முத்துலிங்கம் இலங்கை தொழிற்ச் சங்க செயலாளர் எம். எஸ். எச். முகைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிவபாக்கியம் குமாரவேலுக்கு உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்கி. யோகேஸ்வரி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அங்கத்துவப் படிவம் வழங்கும் நிகழ்வும் இதில் இடம் பெற்றது.

இலங்கையிலுள்ள அனைத்து கடைகளிலும் சாப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றுஉழைக்கும் பெண்கள் தொழில் சங்க முன்னணியின் பொதுச் செயலாளர் கி. யோகேஸ்வரி தெரிவிப்பு

இன்று உலகில் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்கள் பணிபுரிகின்றனர். சாதாரண உடல் உழைப்பு முதல், விண்வெளி ஆய்வு வரை பெண்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக காணப்படுகின்றது. என்று முதலாளி-தொழிலாளி என்ற பிரிவு ஆரம்பமானதோ அன்று முதலே தொழிலாளி என்ற பட்டாளத்தில் பெண்களும் உள்ளடங்கியிருந்தனர்.

இயந்திரப் புரட்சியின் விளைவாக பதினெட்டாம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்ற தொழிற்துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தனர். ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து முதன் முதலாக சிக்காகோ நகரில் எட்டு மணித்தியாள வேலை நேரத்திற்கான போராட்டத்தில் தோளோடு தோள் நின்று பெண்களும் போராடினர்.

உலக தொழிலாளர் வரலாற்றில் பிரிக்க முடியாத தோழியர்களாகவுள்ள பெண்கள் இன்று ஸ்தாபனமயமற்ற தொழிற்துறைகளிலும் முறைசாரா தொழிற்துறைகளிலும் பெருமளவு ஈடுபட்டுள்ளனர். ஸ்தாபனமயமற்ற மற்றும் முறைசாரா தொழிற்துறையில் 65 விழுக்காட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் இப்பெண் தொழிலாளர்களை ஸ்தாபனமயமான தொழிற்துறைகளை பிரதிநிதித்துவமப்படுத்தும் தொழிற் சங்கங்கள் அணித்திரட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை.

இவ்ஸ்தாபனமயமற்ற பெண் தொழிலாளர்களை அணித்திரட்டும் முயற்சியில் பெண்கள் அமைப்புகளே சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியின் ஒரு அங்கமாக இலங்கையின் மத்திய மலை நாட்டில் இப்பெண்களை அணித்திரட்டும் முயற்சியில் உழைக்கும் பெண்கள் முன்னணி 1997 ஆம் ஆண்டு ஈடுபட்டது. இம்முயற்சியின் விளைவாக மலையக தோட்டத்துறைப் பெண்களும், தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களும் மற்றும் வீட்டுப் பணி உள்ளிட்ட முறைசாரா தொழிற்துறையில் ஈடுபட்ட பெண்களும் இவ் முன்னணியில் அங்கம் வகிக்கலாயினர்.

1997 ஆம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் தினத்தை நினைவுகூறும் நிகழ்வினை நடாத்திவரும் உழைக்கும் பெண்கள் முன்னணி பெண் தொழிலாளர்கள் மற்றும் பொதுவில் பெண்கள் முகம் கொடுத்து வரும் உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்து வந்தது. இதேவேளை தொழில் உரிமை மறுப்பு விடயங்கள் தொடர்பாக பரப்புரையினையும், ஏற்புரையினையும் மேற்கொண்டது.

இச்செயற்பாட்டின் விளைவாக உழைக்கும் பெண்கள் முன்னணியினை பெண்களுக்கான தனித்துவமான தொழிற்சங்கமாக பதிவு செய்வதன் அவசியத்தை அடையாளம் கண்டது. உழைக்கும் பெண்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இத்தேவையினை உணர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் அனைத்து சர்வதேச பெண்கள் தினத்திலும் உழைக்கும் பெண்கள் முன்னணியை தொழிற்சங்கமாக பதிவு செய்யும்படி வலியுறுத்தி வந்தனர். இத்தொடர் வலியுறுத்தலின் பயனாகவும், தனியான தொழிற்சங்கத்தின் தேவை இன்று இன்றியமையாததாக காணப்படுகின்றமையினாலும் உழைக்கும் பெண்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதனை தொழிற்சங்கமாக பதிவு செய்யும் முயற்சியினை 2011 ஆம் ஆண்டின் பின்னிறுதியில் மேற்கொண்டனர். இதன் பயனாக 20.12.2011 ஆம் திகதி உழைக்கும் பெண்கள் முன்னணி இலங்கையில் முதலாவது பெண் தொழிற்சங்கமாக தொழிற் திணைக்களத்தின் தொழிற்சங்க ஆணையாளரினால் பதிவு செய்யப்பட்டது.

தனியார் துறையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களையும் முறைசாரா தொழிற்துறைகளிலும் ஈடுபடும் தொழிலாளப் பெண்களையும் அணித்திரட்டி, அவர்களது தொழில் மற்றும் மனித உரிமைகளை வென்றெடுப்பதனை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் உழைக்கும் பெண்கள் முன்னணி முறைசார் தொழிற்துறை பெண்களது உரிமை தொடர்பாகவும் முன்னின்று செயற்படும்.

இன, மத பேதமின்றி அனைத்து தொழிலாளர் பெண்களை தமது முன்னணியின் கீழ் அணித்திரட்டி அவர்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் பெண்கள் முன்னணி, நாட்டின் ஸ்தாபனமயமற்ற, ஸ்தாபனமயமான மற்றும் முறைசாரா தொழிலாளர்களை ஒரு குடையின் கீழ் அணித்திரட்டி, அவர்களது உரிமைகளை வென்றெடுக்க போராடும் அதேவேளை, முற்போக்கு தொழிற்சங்கங்களுடன் நட்புறவை பேணி, ஒட்டு மொத்த தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காகவும் வெற்றிக்காகவும் தம்மை அர்ப்பணிக்கும் .





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com