ஜெனீவா சமர்! இலங்கை படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா..?அமெரிக்க படையில் 25-30 நாடுகள்
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நாளை (27) அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை தோல்வியடையச் செய்ய இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகள் ஆதரவை வழங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜெனீவாவிலுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தொலைபேசி ஊடாக இத்தகவலை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா இலங்கைக்கு ஆதரவு அளிக்காது என ஊடகங்கள் பல வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நாளை (27) ஆரம்பமாகவுள்ள மனித உரிமை கவுன்ஸிலின் 19வது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.
47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.
இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment