Sunday, December 11, 2011

சி.ஐ.ஏ. ரகசியமாக அடைத்து வைத்த இடம்: சங்கேதப் பெயர் BRIGHT LIGHT!!

ரூமேனியா நாட்டு அரசு அலுவலகம் ஒன்றின் கீழ்ப்பகுதியில் (பேஸ்மென்ட்) சி.ஐ.ஏ. ரகசியமான சிலரை அடைத்து வைத்திருந்த ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறது ஒரு ஜேர்மன் பத்திரிகை. செப்.-11 தாக்குதலின் மாஸ்டர்-மைன்ட் என்று நம்பப்படும் காலிட் ஷேக் மொஹாமெட்டும் சில நாட்கள் இங்கே சி.ஐ,ஏ.-யால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்கிறது அப்பத்திரிகை.

இந்தத் தகவல் இப்போது வெளியாகியிருப்பது, ரூமேனிய அரசை அதிர வைத்திருக்கின்றது. அவசரஅவசரமான மறுப்பும் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த ரகசியத்தை வெளியே கொண்டுவந்துள்ள ஜேர்மன் பத்திரிகை Süddeutsche Zeitung, தாம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு தம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளது.

பிலிடிங்கின் உட்புறம் எடுக்கப்பட்ட போட்டோ



வெளியாகியுள்ள தகவல்களின்படி, ரூமேனியா தலைநகர் புச்சாரெஸ்டின் தென்மேற்குப் பகுதியில், மக்கள் குடியிருப்புகள் உள்ள இடம் ஒன்றில் அமைந்துள்ளது குறிப்பிட்ட அரசு அலுவலக பில்டிங். (மேலேயுள்ள போட்டோவில், ரயில்வே ட்ராக்குக்கு பின்புறமுள்ள பில்டிங்)

சி.ஐ.ஏ. முன்னாள் அதிகாரிகள் சிலர், இந்த பில்டிங்கின் உட்புறத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களைப் பார்த்து, அது ரூமேனியாவில் உள்ள சி.ஐ.ஏ.-யின் ரகசிய சிறைதான் என அடையாளம் கண்டுகொண்டதாகக் குறிப்பிடுகிறது ஜேர்மன் பத்திரிகை.

சி.ஐ.ஏ.-யில் இந்த ரகசிய சிறைககு வைக்கப்பட்டுள்ள சங்கேதப் பெயர் ‘பிரைட் லைட்’ என்று தெரியவருகின்றது. இந்த பில்டிங், ரூமேனிய அரசு அமைப்பான National Register for Secret State Information (ORNISS) தலைநகரில் வைத்துள்ள அலுவலகங்களில் ஒன்று.

2003-2006-ம் ஆண்டு காலப்பகுதியில் சி.ஐ.ஏ. தாம் ரகசியமாக விசாரிக்க வேண்டிய நபர்களை இங்கே அடைத்து வைத்து விசாரித்துள்ளனர். கைதிகளை அமெரிக்காவில் வைத்து விசாரிக்கும்போது, அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் விசாரிக்க முடியும். அந்த விசாரணைக் கைதியை ஒரு நீதிபதி பார்க்க விரும்பினால், சட்டப்படி அனுமதி வழங்கியே தீர வேண்டும் என்பதால், கைதியாக இருப்பவர் யார் என்பதில் ரகசியம் காக்க முடியாது.

அதனால்தான், இப்படியான வெளிநாடுகளில் அவர்களை அடைத்து வைத்து விசாரிப்பது சி.ஐ.ஏ.-யின் வழக்கம். ரூமேனியாவில் சி.ஐ.ஏ.-யின் ரகசிய நடவடிக்கைகள், அங்குள்ள அரசின் அனுமதியுடன் நடைபெறுகின்றன என்ற சந்தேகம் நீண்ட காலமாக எழுப்பப்பட்டுக்கொண்டு இருந்தது. ஆனால், அதற்கு ஆதாரம் ஏதும் கிடைத்திருக்கவில்லை.

இப்போது, தம்மிடம் முழுமையான ஆதாரங்கள் உள்ளதாக புயலைக் கிளப்பிவிட்டுள்ளது ஜேர்மன் பத்திரிகை Süddeutsche Zeitung.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com