Saturday, December 3, 2011

கடும்போக்கு பேரினவாதிகள் தமிழ்மக்களுக்கு தீர்வை வழங்க விடமாட்டார்கள்.சித்தார்த்தன்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பேரினவாத கடும்போக்காளர்களின் பங்களிப்பு இருப்பதால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்குமென்பதில் நம்பிக்கையில்லை என்று புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரமடைந்தது தொடக்கம் தமிழ்மக்களின் பிரச்சினை இன்றுவரை தொடர்கின்றது.

வரலாறுகளில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதனால் தந்தை செல்வா – பண்டா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. பின்னர் டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. ஆனால் எந்தவொரு தீர்வும் தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை. மறைந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர், பிறேமதாச ஆகியோருடனும் திம்பு உட்பட பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளும் வட்டமேசை மாநாடுகளும் நடைபெற்றன. அதேபோன்று சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சர்வகட்சி மாநாடு நடைபெற்றது. இவற்றின்போதெல்லாம் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள், இணக்கப்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் தமிழ்மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இன்று யுத்தம் முடிந்த சூழ்நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது. இதில் பேரினவாதிகள் பலரும் இருப்பார்கள். உதாரணமாக இதில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச கலந்து கொள்வார். அதேபோன்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவும் கலந்து கொள்வார். இவர்கள் கடும் போக்கு பேரினவாதக் கொள்கைகளைக் கொண்டவர்கள்.

எனவே தமிழ்மக்களுக்கு தீர்வை வழங்க விடமாட்டார்கள். இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியே தீர்வினை வழங்க வேண்டும். அதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். ஜனாதிபதி என்ற அதிகாரத்துடன் மூன்றிலிரண்டு பாராளுமன்றப் பலமும் உள்ளது. சிங்கள மக்களின் நம்பிக்கையையும் அவர் பெற்றுள்ளார். எனவே, ஜனாதிபதியால் நியாயமான தீர்வை வழங்க முடியும். இதனை சிங்கள மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com