Friday, December 9, 2011

“நான் பொதுவா டி.வி. பேட்டி கொடுப்பதில்லை.. இட்ஸ் ஓகே, நீங்க வாங்க”

அமெரிக்காவின் அடுத்த ‘இலக்கு வரைபடத்தில்’ உள்ள சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத், அமெரிக்காவின் ஏ.பி.சி. நியூஸ் டி.வி. சேனலுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இதுவரை அமெரிக்க மீடியா என்றாலே உடனே “நோ” சொல்வதில் பிரபலமானவர் இவர். அப்படியிருந்தும் இம்முறை பேட்டிக்கு சம்மதித்திருப்பதன் காரணம், மேற்கு நாடுகளின் அடுத்த இலக்கு தனது தலைதான் என்பதை இவர் புரிந்து கொண்டதுதான்.

சிரியாவில் ராணுவத்தினரால் நடாத்தப்படும் பொதுமக்கள் கொலைக்கும் தமக்கும் சம்மந்தமே இல்லை என்று முகத்தை அப்பாவித் தனமாக வைத்துக்கொண்டு அல்-அசாத் கொடுத்த பேட்டி எந்தளவுக்கு நம்மபப்படுகின்றது என்பது தெரியவில்லை. ஆனால், டி.வி. சேனலின் ரேட்டிங் எகிறியிருக்கிறது.

ஏ.பி.சி. நியூஸ் நெட்வேர்க்கின் பார்பரா வால்ட்டர்ஸால் எடுக்கப்பட்ட பேட்டியில் அல்-அசாத், “சிரியாவில் சமீப நாட்களில் நடைபெற்ற பொதுமக்கள் கொலைகள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. கொலைகள் மற்றும் வெளியே சொல்லப்படாத கைதுகள், சித்திரவதைகள் அனைத்துமே ஐ.நா.-வால், மனித உரிமை மீறல்கள் என்று எடுத்துக்கொள்ளப் படுகின்றனவே?” என்ற கேள்விக்கு கொடுத்த பதில்தான் அவரது ரியல் அதிரடி!

“ராணுவத்தினர் கொல்வதாக சொல்கிறீர்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அவர்கள் என்னுடைய ராணுவம் அல்ல! அரசாங்கத்தின் ராணுவம். ராணுவம் எனது தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நாட்டின் ஜனாதிபதி நான். அவ்வளவுதான். நாடு எனது சொத்து அல்ல. அதில் நடப்பவை அந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள். ராணுவத்தின் நடவடிக்கைகள். நான் யாரையும் கொல்வதில்லை” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்.

ஐ.நா.-வின் கணிப்பின்படி சிரியாவில் சமீபகாலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஒன்றல்ல, இரண்டல்ல, 4,000!

ஏ.பி.சி. பேட்டி வெளியானவுடன், அது சிரியாவிலேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நேஷனல் கவுன்சில் (இவர்கள்தான் சிரியாவின் எதிர்க்கட்சி கூட்டணி), “அசாத் எதுவும் புரியாத ஸ்கூல் மாணவர்போல அப்பாவியாக கருத்துக் கூறியிருக்கிறார்” என்று சாடியிருக்கிறது.

“சிரியா நாட்டு சட்டப்படி, ஜனாதிபதி அல்-அசாத்தான் நாட்டின் ராணுவத்தின் கமாண்டர்-இன்-சீஃப்! ராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவர்தான் பொறுப்பு. இத்தனை வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் உள்ள அவருக்கு இது மிக நன்றாகவே தெரியும்” என்றும் கூறியிருக்கிறது நேஷனல் கவுன்சில்.

அசாத்தின் டி.வி. பேட்டி பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, ஒரே வரியில் “just not credible” என்று சொல்வதுடன் நிறுத்திக் கொண்டது. பிரிட்டிஷ் பாரின் ஆபிஸ், “ரத்தம் தோய்ந்த படுகொலைகளை செய்துவிட்டு, அதற்கும் தமக்கும் தொடர்பே இல்லாததுபோல கூறுவது கேலிக்கிடமானது” என்று கூறியிருக்கின்றது.

ஏ.பி.சி. பேட்டியில் அல்-அசாத், “கொடுமை என்று நீங்கள் குற்றம்சாட்டும் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒரு நாட்டால் செய்யப்பட்டது. அல்-அசாத் என்ற தனி நபரால் செய்யப்பட்டதல்ல. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

“அந்தக் கொலைகளை செய்யும்படியான உத்தரவைப் பிறப்பித்தது யார்? ராணுவத்தின் பிரதம தளபதி என்ற முறையில் நீங்கள்தான் அல்லவா?” என்று கேட்ட கேள்விக்கும் தலைகீழான பதில் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் சிரியா ஜனாதிபதி.

“நாம் எமது சொந்த மக்களைக் கொல்வதில்லை. உலகில் எந்தவொரு அரசாங்கமும் தமது சொந்த மக்களைக் கொல்ல உத்தரவிடுவதில்லை. ஒரு நாடு தமது சொந்த மக்களைக் கொல்ல உத்தரவிடுகின்றது என்றால், அந்த நாட்டை ஆட்சி செய்யும் நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருப்பார்” என்று மிக சீரியசாக பதில் சொல்லியிருக்கிறார்.

அடப்பாவி. அதைத்தானே உங்கள் நாட்டைப்பற்றி மற்றையவர்களும் சொல்கிறார்கள்!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com