Saturday, December 10, 2011

அமெரிக்க படைகளுக்கு பயந்து, எல்லையில் ராணுவத்தை குவிக்கும் பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படை, பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் தடுப்பதற்காக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப் படைகள் நவம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியாகினர். அதற்கு வருத்தம் தெரிவித்த அமெரிக்கா, இந்த தாக்குதல் தவறுதலாக நடந்துவி்ட்டதாக கூறியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது அமெரிக்க கூட்டுப் படைகள், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் பயப்படுகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் எல்லையில் விமானப்படைகளை பாகிஸ்தான் குவித்து தாக்குதலை தடுக்கும் முயற்சியி்ல் இறங்கி உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான ராணுவ ஜெனரல் அஷ்பாக் வாதிக் கூறுகையில், "அமெரிக்க கூட்டுப்படைகள் பாகிஸ்தான் எல்லையில் விமானப்படையை தயாராக வைத்திருப்பதாக தெரிகிறது. அமெரிக்க கூட்டுப்படைகளால் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளோம்", என்றார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் அமெரிக்க படைகள் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததாக பாகிஸ்தான் கூறுவதை அமெரிக்கா மறுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com