Wednesday, December 21, 2011

சட்டவிரோதமாக நாணயங்களை எடுத்துச் செல்ல முற்பட்ட நபர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வெளிநாட்டு நாணயங்களை எடுத்து செல்ல முயன்ற இந்திய பிரஜை யொருவர் கைது செய்யப்பட்டார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் சென்னைக்கு பயணம் செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த குறித்த இந்திய பிரஜை யிடமிருந்து யூரோ மற்றும் சவுதி றியால்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் மொத்த பெறுமதி 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும்.

இப்பயணியின் ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நாணயங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க பணிப்பாளர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் வெளிநாட்டு நாணயங்களை சுங்க திணைக்களம் பொறுப்பேற்றது.

இதேவேளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சட்டவிரோத மருந்து வகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கண்டி ஹெத்தெனிய பிரதேசத்தில் இம்மருந்து வகைகள் மீட்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பாக பொதியிடப்பட்டு இந்த மருந்து வகைகள் எடுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட இந்த சட்ட விரோத மருந்துகளை இனங்காணும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது.

மருந்துகளின் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.




.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com