Wednesday, December 28, 2011

உண்ணாவிரதத்தை கைவிட மருத்துவர்கள் அறிவுரை; சிறுநீரகம் செயலிழக்கும் என எச்சரிக்கை

வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே போராட்டம் 2வது நாளை எட்டியுள்ள நிலையில் அன்னா உண்ணாவிரதத்தை கைவிட மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உண்ணாவிரதத்தை கைவிடாவிட்டால் அவரது சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது என கூறினார்.

இது குறித்து அன்னா ஹசாரேவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், அன்னா உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறத்தியுள்ளோம். தவறும் பட்சத்தில் அவரது சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. அவரது உடலில் நீர் வற்றிப்போவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறினர்.

மேலும் அவர்கள், அன்னாவின் உடல்வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது எனவும், அவரது ரத்த அழுத்தம் குறைந்துள்ளதால் நடப்பதற்கு சிரமப்படுவார். அவரது ரத்த அழுத்தம் அமர்ந்திருக்கும்போது 120/90 என்ற அளவில் உள்ளது. நிற்கும்போது 105/70 என்ற அளவில் உள்ளது. நாடித்துடிப்பு 71 ஆக உள்ளது. மருத்துவர்கள் என்ற ரீதியில் அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இறுதி முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என கூறினர்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவுகானும், அன்னா உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை; அன்னாவின் உண்ணாவிரத போராட்டம் 2வது நாளை எட்டியுள்ள நிலையில் எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை. 2வது நாள் போராட்டத்தில் 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அன்னா குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்னா குழு உறுப்பினர்களில் ஒருவர் கூறுகையில், மும்பையில் நாங்கள் எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை. டில்லியில் அன்னா உண்ணாவிரதம் இருந்த போது அதிகளவு மக்கள் வந்தனர். டில்லியை தவிர மற்ற இடங்களில் கூட்டம் குறைவாக உள்ளது. இதற்கு வருடம் நிறைவடைவது காரணமாக இருக்கலாம் என கூறினார். அன்னா போராட்டத்தில் உ.பி., அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்து அதிகம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

பயனில்லாத மசோதா- அன்னா குழு; மத்திய அரசு பலனில்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக அன்னா குழு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பிரஷாந்த் பூஷன் கூறுகையில், மத்திய அரசு பலனில்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதனை மக்கள் கேட்கவில்லை. எங்களது போராட்டம் தொடரும். ராஜ்யசபாவில் நடைபெறுவதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சி.பி.ஐ.,யை சேர்க்காமல் எந்தவித அதிகாரமும் இல்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com