Friday, December 2, 2011

நாட்டு மக்களை எவ்வாறு அரசாங்கங்கள் உளவு பார்க்கிறது. அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..

தங்களது நாட்டு மக்களையே உளவு பார்க்க அரசாங்கங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளைத் தந்து வரும் சர்வதேச தொலைத் தொடர்பு சாப்ட்வேர் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் அதிபர் ஜூலியன் அசாஞ்ச்.

அல்காடெல்-லுசென்ட், சீமென்ஸ், நார்த்ராப் க்ரும்மென் உள்ளிட்ட உலகின் 160 முன்னணி தொலைத் தொடர்பு சாப்ட்வேர் நிறுவனங்கள் பல நாடுகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைத் தந்துள்ளன. இதன்மூலம் மக்களின் செல்போன்- தொலைபேசி உரையாடல்கள், இன்டர்நெட் வாய்ஸ் மெயில்கள், இ-மெயில்கள், எஸ்எம்எஸ்கள், சர்ச் என்ஜின் தேடல்களை அந்த நாட்டு அரசுகள் ஒட்டுக் கேட்டும், படித்துப் பார்த்தும் வருகின்றன.

இந்த ஒட்டு கேட்பு சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் மூலம் ஏராளமான பில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்கள் குவித்து வருகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் தங்கள் நாட்டு மக்களையே உளவு பார்த்து, அவர்களை அரசுகள் முடக்கி வருகின்றன.

குறிப்பாக, அடக்குமுறையான ஆட்சியை நடத்தும் அரசுகள் தங்களது எதிர்ப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒடுக்கவும், ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்களை சிறையில் தள்ளவும் இந்தத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் உதவி வருகின்றன.

குறிப்பாக பிரான்ஸைச் சேர்ந்த உளவு பார்க்கும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அமிசிஸ், இந்தத் தொழில்நுட்பத்தை முன்னாள் லிபிய அதிபர் கடாபிக்கு பல பில்லியன் டாலருக்கு விற்றது. இதைக் கொண்டு லிபியாவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் தனக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களை கடாபி அடையாளம் கண்டு ஒடுக்கினார், பலரை கொலையும் செய்தார்.

(இத்தனைக்கும் லிபியா மீது பொருளாதாரத் தடை அமலில் இருந்தபோதே இதை அமிசிஸ் விற்றுள்ளது)

10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து உளவுப் பிரிவினருக்கு உதவும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்ப சாப்ட்வேர்கள் இப்போது உலகெங்கும் பல்வேறு நாடுகள், அரசுகள், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன.

இதைக் கொண்டு சொந்த மக்களையே நாடுகளும் அரசுகளும் உளவு பார்த்து வருகின்றன. குறிப்பாக லிபியா, எகிப்து, துனீசியா, சிரியா உள்ளிட்ட ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் தலைவர்கள் இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை ஜனநாயக விரோத செயல்களுக்கும், சுதந்திரம் கோரும் குரல்களை ஒடுக்கவும் பயன்படுத்தினர்.

இந்த உளவு சாப்ட்வேர்களை உருவாக்கும் மேற்கத்திய நாடுகளில் அதன் விற்பனையைக் கட்டுப்படுத்த எந்த விதிமுறையும் இல்லை. இதனால் பணம் தந்தால், யாருக்கு வேண்டுமானாலும் இதை தொலைத் தொடர்பு-சாப்ட்வேர் நிறுவனங்கள் விற்று வருகின்றன.

சமீபத்தில் எகிப்திலும் லிபியாவிலும் மக்கள் நடத்திய புரட்சியின்போது ராணுவ, உளவுப் பிரிவு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. அப்போது வெளியே வீசப்பட்ட பல பொருட்களில் இந்த உளவு சாப்ட்வேர்கள் அடங்கிய சிடிக்கள், சிடி ரேம்களும் அடக்கம். இவை விக்கிலீக்ஸ் வசம் சிக்கின. இதை வைத்து மேலும் உலகளவில் விசாரணை நடத்தி இந்தத் தகவல்களைத் திரட்டினோம் என்றார் அசாஞ்ச்.

பின்னர் நிருபர்களைப் பார்த்து, உங்களில் யார் யார் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துகிறீர்கள் என்று அசாஞ்ச் கேட்டார். பெரும்பாலானோர் கையை உயர்த்த.. "Well, you're all screwed'' என்றார் சிரித்தபடியே.

இது தொடர்பான முழு விவரங்களையும் இதற்காகவே விக்கிலீக்ஸ் ஆரம்பித்துள்ள http://owni.eu/ என்ற புதிய இணையத்தளத்தில் காணலாம்.

இதில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த உளவு சாப்ட்வேர்களை உருவாக்கும் நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் அசாஞ்ச்.

இந்தியாவில் சிம்லாவை தலைமையிடமாகக் கொண்ட ஷோகி கம்யூனிகேசன்ஸ், இந்தூரைச் சேர்ந்த க்ளியர் ட்ரையல் ஆகிய நிறுவனங்களும், இங்கிலாந்தின் ஷீல்ட் செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்களும் இந்த ஒட்டு கேட்பு உளவு சாப்ட்வேர்களை தயாரித்து வழங்கி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com