Wednesday, December 7, 2011

தரம்குறைந்த பெற்றோலால் பழுதடைந்த 700 நஷ்ட வாகனங்களுக்கு ஈடு வழங்கப்பட்டுள்ளது.

தரம் குறைந்த பெற்றோல் பயன்பாட்டினால் சேதமடைந்த 700 வாகனங்களுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அவசர அழைப்பு பிரிவிற்கும், எழுத்து மூலமும் 3 ஆயிரத்து 335 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி முதல் நஷ்டஈடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2 கட்டங்களாக இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 15 ஆயிரம் ரூபாவும் மோட்டார் கார் உட்பட ஏனைய வாகனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாவிற்குட்பட்ட தொகையும் நஷ்டஈடாக வழங்கப்பட்டது.

முறைப்பாட்டாளர்கள் நஷ்ட ஈடாக கோரி மொத்த தொகை 60 மில்லியன் ரூபாவாகும் எனினும் குறித்த ஆவணங்கள் பரிசீலனைக்குட்படுத்த போது சில போலிய தகவல்களையும் ஆதாரமற்ற சிட்டைகளையும் சமர்ப்பித்திருந்தாக தெரிய வந்துள்ளது.

நஷ்ட ஈடு வழங்குவதற்காக விசேட பணிப்பாளர் சபை பத்திரத்தின் மூலம் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதில் 38 மில்லியன் ரூபா நிச்சயம் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரம் ஆவணங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கான நஷ்டஈடு அடுத்த சில வாரங்களில் வழங்கப்படுமென பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக பரிசீலனைக்கென ஆயிரத்து 450 ஆவணங்கள் காணப்பட்ட போதிலும் இதில் 65 சதவீதமான ஆவணங்களுக்கு நஷ்டஈடு வழங்க போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. பூர்த்தி செய்யப்படாத ஆவணங்களை பூர்த்தி செய்வதற்கு மேலும் 14 நாள் கால அவகாசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கால எல்லை எதிர்வரும் 26 ஆம் திகதி நிறைவடையும் தாமதமாக கிடைக்கும் ஆவணங்கள் பரீசிலிக்கப்பட மாட்டாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com