Friday, November 18, 2011

அநீதியான தீர்ப்பு என்கிறார் சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதுடன் இந்த அநீதியான தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன் என வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதியின் கூண்டிலிருந்து தனது கருத்தை தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று நான் எண்ணுகின்றேன் என்பதுடன் அநீதியான தீர்ப்பை நிராகரிக்கின்றேன் என்றார்.

இதேவேளை, சிறைத் தண்டனை தொடர்பாக அனோமா பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,

உலகில் எந்வொரு நாட்டிலும் இல்லாதவாறு தடுத்து வைப்பதற்கான அதிகாரம் உள்ள நிருவாகம் இலங்கையில் காணப்படுகிறது. எனது கணவர் சரத் பொன்சேகாவிற்கு இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை தாம் முன்கூட்டியே எதிர்பார்த்தேன். எனினும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை நடுநிலையுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால், நாட்டின் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அனைத்து மக்களும் இணைந்து செயற்பட வேண்டும்.

இந்த அநீதியான சம்பவம் தொடர்பில் எந்தவொரு தரப்பினர் மீது சாபம் விடும் அளவிற்கு நான் இழிந்த நிலையை அடையவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே நியாயமான தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தீர்ப்பை முற்று முழுதாக நிராகரிக்கின்றேன், ஜனநாயக நாடொன்றில் இவ்வாறான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது என்றும், சர்வாதிகாரம் நிலவும் நாடுகளிலேயே இவ்வாறான தீர்ப்புக்கள் அறிவிக்கப்படும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com