Saturday, November 19, 2011

ரிசானா நபீக்குக்கு மன்னிப்பு கிடைக்கும் சாத்தியம்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்குக்கு, பொது மன்னிப்பு கிடைக்கும் சாத்தியம் தோன்றியுள்து. அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா தலைமையிலான குழு ஒன்று சவுதி சென்றுள்ளது.

அந்த குழு ரிசானா நபீக்கினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் குடும்பத்தாரை சந்தித்துள்ளனர். கொலையுண்ட சிசுவின் குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கைப் பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பெற்றோரிடமிருந்து மன்னிப்பு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது குடும்பத்தாருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கை பிரதிநிதிகள் தெரிவுத்துள்ளனர்.

சிசுவின் பாட்டனார் உள்ளிட்ட தரப்பினர் சாதகமான முறையில் பதிலளித்துள்ளதாகவும்,மன்னிப்பு கிடைக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அரேபிய செய்தி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் பிரகாரம் கொலையுண்ட சிசுவின் பெற்றோர் வழங்கினால் மட்டுமே ரிஸானாவை காப்பாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரிஸானாவை விடுதலை செய்யும் முயற்சிகளில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் வழக்கு விசாரணை பிராந்திய நீதிமன்றத்தில் இருந்து மன்னரின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியா சென்றுள்ள ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. அங்கிருந்து அறிவித்துள்ளார்.

ரிஸானாவின் விடுதலை தொடர்பாக சவூதி உயர்மட்டத்தினரைச் சந்திக்க சென்றுள்ள இலங்கைக் குழு ரியாத்தில் இருந்து 520 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அல்-தலாதீ மாநிலத்துக்குச் சென்று மரணித்த குழந்தையின் நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தது. ரிஸானாவை எந்த வகையிலாவது விடுதலை செய்யுமாறு இக்குழு கேட்டுக் கொண்டது. முதன் முதலில் இக்குழு ரியாத்தில் மரணமுற்ற குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியது.

இக்குழுவில் சென்றிருந்த ஆளுநர் எஸ். அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் கரங்களைப் பிடித்து ரிஸானாவை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அல்-தலாதீ மாநில நீதிமன்றத் தலைவர் ஷேக் கபீர் முஹம்மத் ரைஹான் அல்-அஸாரியையும் குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜேரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதி செயலாளர் ஐ. எம். அன்ஸார் மெளலவி தாஷிம், மெளலவி சறூக், ஐ. ஆர். ஓ. பிரதிநிதி இம்ரான் ஜமால்தீன் ஆகியோரும் குழுவில் இடம்பெறுகின்றனர்.

தான் பணியாற்றிய வீட்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை ரிஸானா நபீக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சவூதி அரேபிய நீதிமன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி தூக்குத் தண்டனை வழங்க தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com