Friday, November 18, 2011

பிரதேச செயலகங்கள், கிராமசேவகர் எல்லைகள் மீள் நிர்ணயம் தொடர்பாக கருத்தரங்கு!

இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை எடுத்து நோக்கும் போது அரசியல் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வடிப்படையில் யாப்பு சீர்திருத்தம், தேர்தல் முறைமையில் மாற்றம் மற்றும் உள்ளுராட்சி அமைப்புகள் இலகுவாக மக்களை அணுகக்கூடியதாக காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் மேற்படி விடயங்களில் ஒன்றான பிரதேச செயலக, கிராம சேவகர் பிரிவு எல்லை ஆகியவற்றை மீள் நிர்ணயம் செய்தல் அல்லது புதிதாக அமைத்தல் சம்பந்தமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும்.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் கிராம மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் தொடர்பில் மலையகத்தை சேர்ந்த சிவில் அமைப்புகள், அரசியற்கட்சிகள், புத்தீஜீவிகள் என அனைத்து தரப்பிரனரும் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்பபுத்துவது இச்சந்தர்ப்பத்தில் முக்கியமான விடயமாகும் என்று கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி. பி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

ஹட்டன் அஜந்தா விடுதியில் மனித அபிவிருத்தி தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் திரு. பி.பி. சிவப்பிரகாசம் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பிலான கலந்துரையாடல்கள் அவ்வவ் பிரதேச செயலகங்களில் மேற்கொள்வதற்கான தினங்களை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், இக்கலந்துரையாடலுக்கு முன்னர் மலையகத்தை பிரதிநிதித்தவப்படுத்தும் சிவில் அமைப்புகள், அரசியற்கட்சிகள், புத்தீஜீவிகள் ஆகியவர்களுடன் ஒரு கலந்துரையாடலை தாபனம் ஏற்பாடு செய்தமைக்கான காரணம் பதுளை மாவட்டத்தில் சிவில் அமைப்புகள், அரசியட்கட்சிகள், புத்தீஜீவிகள் அழுத்தம் இல்லாமல் இருந்தமையால் மலையக மக்கள் பெரும்பான்மையாக வழும் இடங்களில் புதிய பிரதேச செயலகம், கிராம சேவகர் பிரிவு தொடர்பான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தகையதொரு நிலை நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படக் கூடாது. எனவே அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வுடன் செயல்ப்பட வேண்டும்.

அத்தோடு பல வருடங்களாக அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், புத்திஜீவிகளும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ள போதும் அது சாத்தியப்படாததொன்றாகவே இருந்து வந்துள்ளது. இலங்கையில் 40,000 பேருக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு எனவும், 350 – 500 குடும்பத்திற்கு ஒரு கிராம சேவகர் எனவும் கூறப்பட்டாலும் இது தொடர்பில் ஒரு திட்டவட்டமான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதனால் சில மாவட்டங்களில் அதிக சனத்தொகையை கொண்ட கிராம சேவகர் பிரிவகளில் மக்கள் தமது சேவைகளை பெறுவதில் நடைமுறை ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே மக்களின் நலன், பௌதீக காரணிகள் (புவியல்) என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு தற்போதுள்ள 5 கிராம சேவகர் பிரிவுகளையும் 12 ஆக உயர்த்த நாம் அனைவரும் சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் இறுதி தீர்வாக 12 கிராம சேவகர் பிரிவுகளை கேற்பது தொடர்பாக அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் திறந்த பல்கலைகழகத்தின் சமூகவியல் விஞ்ஞான துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி. சுந்திரபோஸ், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் திரு. புத்திரசிகாமனி, மனித அபிவிருத்தி தாபன பணிப்பாளர் திரு. பி.பி. சிவப்பிரகாசம், மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு. லோரன்ஸ், பேராதனை பல்கலைகழ சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விஜயசந்திரன், பிரிடோ நிறுவனத்தின் திரு. ஆர். சிவலிங்கம், மற்றும் மலையக அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டதரணிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com