Wednesday, November 23, 2011

அமெரிக்காவில் சாக்கடை குழாய் வழியாக ஊடுருவ முயன்றவர் கைது

பாதாள சாக்கடை குழாய் வழியாக அமெரிக்காவில் ஊடுருவ முயன்ற மெக்சிகோ வாலிபர், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு கைது செய்தனர். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்த வாலிபர் (25) ஒருவர் அமெரிக்காவில் ஊடுருவும் திட்டத்துடன் சான்டியாகோ பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தார். டிஜுவானா ஆறு, பசிபிக் கடலில் கலக்கும் முகத்துவார பகுதியின் வழியாக அமெரிக்க எல்லையில் புகுந்தார். அங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் நுழைந்து, அதன் வழியாக சென்று நாட்டுக்குள் சென்றுவிடலாம் என்பது அவரது திட்டம். சுமார் 3 அடி அகலம் கொண்ட குழாயில் புகுந்தார்.

இந்நிலையில், கலிபோர்னியாவில் அதிக மழை பெய்ததால் சாக்கடையில் நீர் வரத்து அதிகரித்தது. உள்ளே வாலிபர் சிக்கிக் கொண்டார். இதற்கிடையில், மழை மீட்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் எதேச்சையாக பார்த்து, அவரை பத்திரமாக மீட்டனர். பாதாள சாக்கடைக்குள் வெள்ளத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள அவர் மெக்சிகோவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று அதிகாரிகள் கூறினர்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com