Thursday, November 17, 2011

முக்கிய ராணுவ ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஆஸி., கையெழுத்து : சீனாவின் ஆதிக்கத்திற்கு ஆப்பு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், சீனாவின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. "தெற்காசிய மண்டலத்திற்கு இது நல்லதல்ல' என அந்நாடு எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவைக் கண்டு அமெரிக்கா பயப்படப் போவதில்லை என ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸி.,யில் ஒபாமா : ஹவாய் தீவில், சமீபத்தில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டை முடித்த கையோடு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று ஆஸ்திரேலியா சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவங்கள் இணைந்து முக்கிய போர்களில் பணியாற்றியதை நினைவு கூரும் வகையில் ஒபாமா ஆஸி., சென்றுள்ளார்.

முக்கிய ஒப்பந்தம்: ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டும், ஒபாமாவும் நேற்று முக்கிய ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, ஆஸி.,யின் வடபகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில், அமெரிக்காவின் 250 போர்க் கப்பல்கள் ஆறு மாத காலத்திற்கு முகாமிட்டிருக்கும். அவற்றில், மொத்தம் ஒரு கடற்படை அளவான 2,500 வீரர்கள் இருப்பர். இருதரப்பு ராணுவங்களும் அப்போது கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளும். இந்தத் திட்டம் அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

சீனாவிற்கு ஆப்பு: அமெரிக்காவின் இந்தப் படைக் குவிப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆஸி.,யில் மிக அதிகளவு எனவும், தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு ஆப்படிக்கும் முயற்சி எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் அமெரிக்கா நிரந்தரமாக ராணுவத்தை நிலைநிறுத்தும் முயற்சியல்ல என, இருதரப்பு அதிகாரிகளும் கவனமாக விளக்கம் அளித்தனர்.
தற்போது ஜப்பான், தென்கொரியாவில் நிரந்தரமாகத் தனது படைகளைக் குவித்துள்ள அமெரிக்கா, அடுத்தாண்டில் இருந்து ஆஸி.,யிலும் தனது கூட்டுப் பயிற்சியைத் துவக்கும். எனினும், ஆஸி.யை அது தனது நிரந்தரத் தளமாக ஆக்காது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

பயமில்லை: ஒபாமா, கில்லார்டு இணைந்து அளித்த பேட்டியில், சீனாவை ஒடுக்கும் முயற்சியா இது என செய்தியாளர்கள் கேட்ட போது ஒபாமா கூறியதாவது: ஒரு வளர்ந்த நாடாக உருமாறும் போது சீனா சில பொறுப்புக்களுடன் செயல்பட வேண்டியது அவசியம். சீனாவின் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்கா பயப்படவில்லை.

அமெரிக்கா சீனாவைக் கண்டு பயப்படுகிறது என்பதும், சீனாவை அமெரிக்கா தவிர்க்க நினைக்கிறது என்பதும் தவறு.

இருதரப்பு ராணுவங்களும் தங்கள் திறன் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மட்டும் இந்த படைக் குவிப்பின் நோக்கம் அல்ல. இப்பகுதியில் உள்ள சில நட்பு நாடுகள் தாங்களும் பயிற்சி பெற வேண்டும் என நினைக்கின்றனர். இப்பகுதியின் பாதுகாப்புக்கு நாங்கள் இங்கிருந்தால் நலம் பயக்கும் எனக் கருதுகின்றனர். அவற்றுக்காகவும் தான் இந்தப் படைக் குவிப்பு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

சீனா கடும் எதிர்ப்பு? : இந்த ஒப்பந்தத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியு வெய்மின் பீஜிங்கில் நேற்று அளித்த பேட்டியில்,"இது பொருத்தமில்லாத நடவடிக்கை. இப்பகுதி நாடுகளுக்கு நன்மை பயக்கும் செயலல்ல' என்றார்.

சீனாவின் எதிர்ப்புக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடெஸ் உடனடியாக அளித்த பதிலில்,"இது பொருத்தமான நடவடிக்கை தான்' என்றார்.
இன்று... : இன்று, ஆஸி., பார்லிமென்ட்டில் உரையாற்றும் ஒபாமா அதன்பின், டார்வின் துறைமுகத்திற்குச் செல்கிறார். அங்கு அமெரிக்காவின் ஆசிய பசிபிக் மண்டலம் பற்றிய கொள்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவர் இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று துவங்கி 19ம் தேதி வரை நடக்க உள்ள "ஏசியான்' அமைப்பின் 19 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை : இந்தியாவுக்கு யுரேனியம் அளிக்கும் ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டின் முடிவின் பின்னணியில், அமெரிக்கா செயல்பட்டதாக ஆஸி., பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. கில்லார்டு அளித்த பேட்டியில்,"எனது இந்த முடிவையும் அமெரிக்க அதிபரின் ஆஸி., வருகையையும் இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. இது எனது சுய முடிவு' எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று ஆஸி., வந்த ஒபாமாவும்,"ஆஸி.,யின் இந்த முடிவிற்கும் அமெரிக்காவிற்கும் சம்பந்தமில்லை. இவ்விஷயத்தில் ஜூலியா எனது ஆலோசனையைக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. இது இந்தியாவுக்கும் ஆஸி.,க்கும் இடையிலான விஷயம்' என்றார்.

இதுகுறித்து ஆஸி., பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த பல மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஆஸி., அதிகாரிகள், இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் குறித்து பேச்சு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உடனான தனது உறவில், ஆஸி.,யும் பிரிக்க முடியாத அங்கம் என அமெரிக்கா கருதுவதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில்,"அமெரிக்கா, ஆஸி., கூட்டணி என்பது, ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பசிபிக் கூட்டணியில் இருந்து உருவானதுதான்' என்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

கெவின் ரூத் கோபம் : இந்தியாவுக்கு யுரேனியம் வினியோகிப்பது குறித்து, ஆஸி., முன்னாள் பிரதமரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமான கெவின் ரூத்தை பிரதமர் ஜூலியா கில்லார்டு கலந்தாலோசிக்கவில்லை என்பதால் கெவின் ரூத் கோபத்தில் உள்ளார்.

கில்லார்டின் முடிவுக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி அல்பேன்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். ரூத் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமரை ஆதரிப்பதாகத் தெரிவித்த அவர், இவ்விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் எனக் கூறியுள்ளார். இதனால், ஆளும் தொழிலாளர் கட்சியில், யுரேனியம் விவகாரம் பிளவை ஏற்படுத்தலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com