Friday, November 4, 2011

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் கைது

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேர் நீர்கொழும்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியா மற்றும், மாலைதீவை சேர்ந்த இருவரும் இலங்கையை சேர்ந்த மூவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். மலேசியாவை சேர்ந்த மார்கியூரி டீன் ஹசீன் மாலைதீவை சேர்ந்த மொஹமட் சப்ராஸ் ஆகியோரே கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்ளாவர். நீர்கொழும்ப குரணை பிரதேசத்தை சேர்ந்த செல்லப்புலிகே லக்சான் , குரணையை சேர்ந்த லொயிட் லிபிய பெர்நாந்து, கண்டி குருத்தலாவையை சேர்ந்த துன்பேலகே கெதர சந்திரபால ஆகியோரே இலங்கையை சேர்ந்த சந்தேக நபர்களாவர்.

சந்தேக நபர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கடனட்டைகளில் உள்ள விபரங்களை இரகசியமாக திருடி போலி கடனட்டைகளை தயாரித்து இலங்கையிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். பின்னர் கொள்வனவு செய்த பொருட்களை மலேசியாவை சேர்ந்த சந்தேக நபர் மலேசியாவில் நடத்தி வரும் விற்பனை நிலையமொன்றுக்கு இங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

கண்டி குருத்தலாவையை சேர்ந்த நபர் குற்றச்செயல் ஒன்றுக்காக சிங்கப்பூர் சிறைச்சாலையில் இருந்த போது மலேசியாவை சேர்ந்த சந்தேக நபருக்கு சிறைச்சாலையில் வைத்து அறிமுகமாகியுள்ளார். இரு சந்தேக நபர்களும் விடுதலையாகி வந்த பின்னர் மாலைதீவு மற்றும் இலங்கையை சேர்ந்த சந்தேக நபர்களையும் இணைத்து கொண்டு கடனட்டை மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விடயம் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது .

ஐந்து சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி வெளிநாட்டு கடவுச்சுசீட்டுக்கள் பலவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் பொலிசார் ஆஜர்செய்த போது பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க சந்தேக நபர்கள் ஐவரையும் எதர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலி;ல் வைக்குமாறு உத்தரவிட்டார்

இதேநேரம் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஒருவரினதும் அவரது மகள் ஒருவரினதும் வீட்டினுள் புகுந்து நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் உட்பட பெறுமதி வாய்ந்த பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தம்பதியினரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் தலா 12 ஆயிரத்து 500 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா நான்கு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு பிட்டிபனை பிரதேசத்தை சேர்ந்த கணவன் மனைவி ஆகியோரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர். சந்தேக நபர்கள் வீட்டு யன்னல் ஊடாக உட்புகுந்து திருடிய பொருட்களை பல்வேறு நிலையங்களில் அடகு வைத்த நிலையில் பொலிசார் மீட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com