Friday, November 25, 2011

மன்னருக்கு எதிராக குறுந்தகவல் அனுப்பிய 61 வயது நபருக்கு 20 வருட சிறைத்தண்டனை!

தாய்லாந்தில் மன்னரை அவமதிக்கும் விதத்தில் குறுந்தகவல் அனுப்பியவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அம்பொன் டங்னொபாகுல், என்ற அந்த 61 வயது ஆடவர் 2010ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் அபிசித் வெஜஜிவாவின் தனிச் செயலாளருக்கு மன்னருக்கு எதிரான வாசகங்கள் கொண்ட குறுந்தகவல்களை அனுப்பியதாக பேங்காக் குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அம்பொன் குற்றம் புரிந்ததாக நீதிமன்றம் கண்டறிந்ததால் அவரை 20 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பியதாக தெரிவித்த அவரின் வழக்கறிர் அனொன் நம்பா, மேல் முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட அம்பொன், விசாரணையின் போது தாம் அந்த செயலை செய்யவில்லை என்று மறுத்து வந்தார்.

குறுந்தகவலில் அனுப்பப்பட்ட வாசகங்கள் என்ன என்பதை தெரிவிக்க மறுத்த தாய்லாந்து மத்திய புலனாய்வு துறை, தகவல்கள் அனைத்தும் பொருத்தமில்லாமலும் மன்னரை அவமதிக்கும் விதத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளது. அந்த குறுஞ்செய்திகளை பெற்றவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் புலனாய்வு துறை கூறியுள்ளது.

உலகிலேயே அதிக ஆண்டுகள் மன்னராக ஆட்சி செய்து வருகிறார் என்ற சிறப்பை பெற்றவர் 83 வயதாகும் தாய்லாந்து மன்னர் புமிபால் அதுல்யதேஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் மன்னரை கடவுளாகவும் பார்க்கின்றனர். தாய்லாந்து சட்டப்படி அரசர் அல்லது அரசியாருக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு தவறுக்காகவும் குறைந்தது 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெறுவதற்கு அந்நாட்டு சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கரோக்கி’ மதுக் கூடங்கள், கார்கள், ஹோட்டல்கள் என பல இடங்களில் வைத்து 14 பள்ளிச் சிறுமிகளை கற்பழித்தவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சீனா. சென் வெய்ஜுன் என்ற அந்த ஆடவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஸீஜியாங் மாநிலத்தின் லிஷுயி நகரில் மரண தண்டனையை நிறைவேற்றியதாக உள்ளூர் தகவல் சாதனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்பது சிறுமிகள் உட்பட 14 உயர்நிலைப் பள்ளி மாணவிகளை சென் கற்பழித்ததாக அங்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. சீனாவில் பொதுவாக துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது வழமை. ஆனால் தற்போது விஷ ஊசிகள் மூலம் மரண தண்டனை அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தான் ஆண்டுதோறும் அதிகமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்பது நினைவுகூரத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com