Friday, November 25, 2011

சனல் 4 வின் முகத்திரையை கிழிக்குமா லண்டன் சூட்டுக்குறி! பீமன்

இலங்கையில் புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் தேசத்திலுள்ள புலிகள் தமது பணவசூலிப்பை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆயுதமாக போர்குற்றம், சர்வதேச விசாரணை எனும் கோஷங்களை கையிலெடுத்துள்ளனர். வன்னியிலே புலிகள் தனியானதொரு சட்டவிரோத நிர்வாகக் கட்டமைப்பை வைத்திருந்தபோது, அவர்கள் தமக்கெனத் தனியான தொலைக்காட்சி , வானொலி சேவைகளையும் வைத்திருந்தனர். புலம்பெயர் தேசத்திலே தமக்கு தேவையான நிதி மற்றும் வளங்களை பெற்றுக்கொள்வதற்கான மூளைச்சலவைச் பிரச்சாரங்கள் இவ்வூடகங்களுடாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையிலே புலிகளியக்கம் அழிக்கமுடியாதவொரு மாபெரும் மரபு படையணியை கொண்டுள்ளது என நம்பியிருந்ததாலோ, அன்றில் பிரபாகரனின் கட்டுப்பாட்டிலேயே யாவும் இருக்கவேண்டும் என்ற எழுதப்படா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாலோ, தலைமை செயலிழக்க நேரிட்டால் அதன் இரண்டாம் நகர்வு எங்கிருந்து செல்வது என்பதற்கான திட்டங்கள் எதுவும் இருந்திருக்காததால்.. புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டவுடன்.. புலம்பெயர் புலிகள் தமது பணவருவாயின் பெரும்பகுதியை, குறிப்பாக மக்களிடமிருந்து கிடைக்கும் கப்பப்பணத்தை இழக்கநேரிட்டது.

புலம்பெயர் தேசத்திலே புலிகளின் ஆதரவு ஊடகங்கள் என தம்மை எத்தனையோ ஊடகங்கள் காண்பித்துக்கொண்டாலும், வன்னியிலிருந்து இயங்கிய ஊடகங்களின் செய்திகளை நம்பிய அளவிற்கு புலித்தலைமையின் அழிவிற்கு பின்னர் புலம்பெயர் ஊடகங்களை நம்புவதற்கு மக்கள் தயாரக இல்லை. இதனை உணர்ந்து கொண்ட புலம்பெயர் புலிகளின் வலையமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை தமது மாயையினுள் வைத்திருந்து அறவிடுதலை முன்னெடுப்பதற்கான ஒரே சாதனமாக சனல் 4 வெளியீடுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு சனல் 4 ஏமாற்றுகின்றதா? அன்றில் ஏமாறுகின்றதா? ஏன்பதே தொக்கி நிற்கின்ற கேள்விகளாகும்.

சனல் 4 வையும் பிரித்தானியா உட்பட்ட உலக நாடுகளையும் புலிகள் ஏமாற்றுகின்றார்களா? அன்றில் புலிகளுடன் இணைந்து சனல் 4 ஏமாற்றுகின்றதா என்பதை கடந்த 7ம் திகதி சனல் 4 வெளியிட்ட வீடியோ காட்சி நிரூபிக்கப்போகின்றது.

குறிப்பிட்ட வீடியோவில், இவ்வருடம் ஜுன் மாதத்தில் இலங்கையில் படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும், அவனின் முதுகில் கம்பி , வயர் , பொல்லுகள் போன்றவற்றால் தாக்கப்பட்டதாக முதுகில் தளும்புகளும் காண்பிக்கப்பட்டன.

ஆனால் இவ்விளைஞன் பிரித்தானியாவிலே சட்டவிரோதமாக இயங்குகின்ற குறிசுடும் இரகசிய சித்திரவதைக் கூடங்களில் குறி சுட்டுக்கொண்டவர் எனத் தெரியவருகின்றது. பிரித்தானியாவிலே அரசியல் தஞ்சம் கோருவோர் தாம் இலங்கையில் துன்புறுத்தப்பட்டோம் என வழங்குகின்ற பொய் தகவல்களை நிரூபிப்பதற்காக மேற்படி சட்டவிரோத நிலையங்களில் பணம்கொடுத்து உடம்பில் குறி சுட்டுக்கொள்கின்றனர்.

பிரித்தானியாவில் சவுத்தோல் எனுமிடத்தில் லேடிமார்கெட் வீதியில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டவரும் புலிகளியக்கத்தில் முல்லைபிரதேச தளபதியாகவிருந்தவருமான அப்பாச்சி என அழைக்கப்படும் நபர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இவ்வாறானதொரு சித்திரவதை மையம் இயங்கி வந்துள்ளது. குறிப்பிட்ட கட்டிடத்தை வங்கி ஒன்று சுவீகரித்துக்கொண்டதை அடுத்து குறிப்பிட்ட கூடம் தற்போது அங்கிருந்து பிறிதொரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்படும் மேற்படி குறிசூட்டுக்காக 100 - 500 பவுண்டுகள் அறிவிடப்படுகின்றது. ஒருபங்கு நைட்றிக் அமிலமும் முன்று பங்கு ஹைட்றோ குளொறிக் அமிலமும் கொண்ட தங்கம் உருக்குவதற்கு பயன்படும் அமிலக்கலவை மூலம் இக்குறி சூடு இடம்பெறுகின்றது.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோருவோர் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவுள்ள குறிசுடுதலினை அங்குள்ள சொலிசிற்றர்கள் சிலரே நடாத்துகின்றனர். அரசியல் தஞ்சம் கோரலுக்கான கோவைத் தயாரிப்பு வேலைகள் யாவற்றையும் கொந்தராத்து அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் சொலிசிற்றர்கள் குறிசுடுதல், போலிக்குறியை அடிகாயத்தளும்பு என வைத்தியர் சான்றுதல்களை பெறுதல், மேலதிக போலி ஆவனங்கள் தயாரித்தல் போன்ற சகல விடயங்களுக்குமாக பெரும்தொகைப் பணத்தை அறவிடுகின்றனர். குறிகளை அடிகாயத் தளும்புகள் என குறிப்பிட்ட சில வைத்தியர்களே சிபார்சு செய்வதாகவும், இலங்கையர்களான இவ்வைத்தியர்கள் இதற்காக நோயாளிகளிடம் நேரடியாக பணம் பெறுவதில்லை எனவும் சொலிசிற்றர்களே இவர்களுக்கான லஞ்சப்பணத்தை இரகசியமாக வழங்குவதாகவும் அறியமுடிகின்றது.

சனல் 4 வில் தோன்றியுள்ள இவ்விளைஞனின் அரசியல் தஞ்சம் சம்பந்தமான வழக்கினை தனோஜா எனப்படுகின்ற சொலிசற்றர் ஒருவரே மேற்கொள்வதாகவும், தனோஜா புலிகளின் தலைமைச் செயலகம் எனப்படுகின்ற விநாயகம் தலைமையிலான அணியினை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது. குறிப்பிட்ட இளைஞனிடம் 'நீர் இவ்வாறு ஒரு தொலைக்காட்சியில் தோன்றினால் உமக்கு மீண்டும் இலங்கை செல்ல முடியாது என்ற அடிப்படையில் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்ள முடியும்' என தெரிவித்தே இளைஞனை தொலைக்காட்சியில் தோன்ற தனோஜா தூண்டியதாகவும் அற்கான இணைப்புக்களை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் அறியக் கிடைக்கின்றது.

குறிப்பிட்ட இளைஞன் பொல்லுகள், கம்பிகள், வயர்களால் தாக்கப்பட்ட காயங்களே இவை என தனது முதுகுப்புறத்தை காட்டுகின்றார்.மேற்படி படத்தை பார்கின்ற எவராலும் இதன் உண்மைத் தன்மையை ஊகித்து கொள்ள முடியும். வயர், கம்பி, சைக்கிள்செயின், இரும்பு என்பவற்றால் தாக்கப்பட்ட காயங்களையும் அவற்றால் உருவாகிய தளும்புகளையும் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இங்கு படத்தில் உள்ள இளைஞனின் முதுகில் ஒரே பிறசினால் பெயின்ட் அடித்தால் போல் உள்ளதை பார்க்க முடிகின்றது. அத்துடன் இளைஞனின் முள்ளந்தண்டு பள்ளத்திலும் துல்லியமாக கீறப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இது போலியான குறிச்சூடு என லுண்டனில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவருமே தமக்குள் பேசிக்கொள்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட வெளியீடானது பிரித்தானியப் பிரைஜைகள் மத்தியில் இலங்கைக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசு மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு சம்;பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் கொண்டு செல்லவேண்டும். குறிப்பிட்ட இளைஞர்களை சித்திரவதைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற சிறந்த வைத்திய நிபுணர்களிடம் ஆஜர்படுத்தி இதன் உண்மைத் தன்மையை உலகிற்கு உணர்த்தவேண்டும்.

இதிலுள்ள உண்மைகளை கண்டறிவதற்கு சனல் 4 தொலைக்காட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும், அவ்வாறு அது ஒத்துழைப்பு வழங்க மறுக்குமாக இருந்தால் சனல் 4 மேற்படி தகவல்கள் பொய்யானவை என தெரிந்து கொண்டு, தீய நோக்குடன் ஒளிபரப்பியுள்ளது என்ற முடிவுக்கு இலகுவாக வரமுடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com