Sunday, November 27, 2011

நேட்டோ” குண்டு வீச்சில் 28 வீரர்கள் பலி: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பதிலடி.

எல்லை பகுதிகளை அடைத்தது

பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் அத்துமீறி நுழைந்து சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அமெரிக்கா -பாகிஸ்தானுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அவ்வப்போது அவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மலைபகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்க கூட்டுப்படை (“நேட்டோ”) ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்கின. இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு சென்று நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 2 ராணுவ மேஜர்கள், ஒரு கேப்டன் உள்பட 28 வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் யூசுப் ரசாகிலானி மந்திரி சபையை உடனடியாக கூட்டினார்.

அப்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க தலைமையிலான “நேட்டோ” படைகளுக்கு பாகிஸ்தானின் தோர்க்காம், சாமன் ஆகிய எல்லைப் பகுதிகள் வழியாகதான் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் வீரர்களுக்கான உணவு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

எனவே அந்த பாதைகளை அடைத்து விடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி நேற்று உடனடியாக 2 எல்லை பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனால் நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி சென்ற 40 லாரிகள் பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டன. அவை ஜம்ரூட் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன. பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி அழித்து விடுகிறது.

அதற்காக ஷாம்சி விமான படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. தற்போது நடந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து இன்னும் 15 நாட்களுக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பிரதமர் கிலானியை நேரில் வந்து சந்திக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சம்மன் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய குண்டு வீச்சு சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு அமெ ரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், ராணுவ மந்திரி லியோன் பெனெட்டா ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.

1 comments :

Anonymous ,  November 27, 2011 at 8:43 PM  

Nato bombings and US drone attacks
on civilians in Pakistan, Afghanistan
Somalia is an unanswered issue by the international community.Will the International human rights groups or the activists give a proper explanation to this issue....?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com