யேமன் அதிபர் பதவி விலகவேண்டும். ஐ.நா பாதுகாப்பு கவுண்சில் ஏகமனதாக தீர்மானம்.
யெமன் அதிபர் அப்துல்லாஹ் ஸாலிஹ் அரசு எதிர்ப்பாளர்களை கொலைச் செய்வதை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டு பதவி விலகவேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கவுன்சிலில் 15 உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகரித்த தீர்மானம் எதிர்ப்பாளர்கள் மீது அரசு நடத்தும் அடக்குமுறையை கடுமையாக கண்டித்தது. ஸாலிஹின் 33 ஆண்டுகால ஆட்சியை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) முன்வைத்த திட்டத்தை பாதுகாப்பு கவுன்சில் ஆதரித்துள்ளது.
கடந்த ஜனவரியில் துவங்கிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜி.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என வாக்குறுதியளித்த ஸாலிஹ் அதனை நிறைவேற்ற வேண்டும். மேலும் சிறிதும் தாமதிக்காமல் பதவி விலகலை சாத்தியமாக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜி.சி.சி ஒப்பந்தத்தை ஸாலிஹ் அங்கீகரித்தாலும் இதுவரை கையெழுத்திடவில்லை.
அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாசெய்வதற்கு சர்வதேச அழுத்தத்தை வலுப்படுத்த வேண்டும் என நோபல் பரிசு பெற்ற யெமனின் பெண் போராளி தவக்குல் கர்மான் நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்திற்கு முன்பு நடந்த போராட்ட சங்கமத்தில் வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை முன்வைத்து ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், ஐ.நாவில் பிரான்சு தூதர் ஜெராட் அரவ்த், மூத்த தூதரக பிரதிநிதிகள் ஆகியோரை தவக்குல் கர்மான் சந்தித்தார். யெமனில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பான்கீ மூன் கர்மானுக்கு உறுதி அளித்ததற்கு பின்னால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கிடையே பல்லாயிரக்கணக்கான மக்கள் ஸாலிஹின் ராஜினாமாவை கோரி ஸன்ஆவின் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ‘மிஸ்டர் ஸாலிஹ்! கத்தாஃபிக்கு பிறகு நீங்களும் ஆஸாதும்தான்!’ என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
0 comments :
Post a Comment