தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தார்மீக உரிமை த.தே.கூ வுக்கு இன்னும் உண்டோ?
தயவுசெய்து மனம்திறந்து சொல்லுங்கள் - கல்முனை கீரன்
தன் தலைவன் எவ்வாறிருக்க வேண்டுமெனும் எதிர்பார்ப்புகளும் அவற்றை அளவிடுவதற்கேற்ற அளவு கோல்களும் ஒவ்வொரு உள்ளத்திலும் இருப்பது தலைவனின் இயல்பையும் ஆளுமையையும் அடிப்படையாகக்கொண்டே, ஒவ்வொரு சமூகமும் உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதும் ஏளனம் செய்யப்பட்டு ஒதுக்கப்படுவதும் தங்கியுள்ளது.
இவ்வகையில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தார்மீக உரிமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உண்டா? இல்லையா? என்பதை அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் களம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம், மாறுபட்ட முகம்களை காட்டிக்கொண்டு வரும் பச்சோந்தி கூட்டம்களான இவர்கள், கல்முனை மாநகர சபை தேர்தல் களத்திலும் கொழும்பு மாநகரசபை தேர்தல் களத்திலும்; இரு வேறுபட்ட முகம்களைக்காட்டி தமிழ் மக்களுக்கு மன்னிக்க முடியாத வரலாற்று துரோகம்களை இழைத்ததன்மூலம் பேரினவாதிகளுக்கும், அவ்வப்போது தமது ஆசாபாசம்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் தம் இனத்தை அடகு வைத்து விட்டனர்.
இதனால் குறிப்பிட்ட இருமாநகர சபைகளுக்கும் தமிழ் மக்கள் சார்பில் கிடைக்கவேண்டிய பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்துள்ளது. கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தலைமைகள் தமது ஆசபாசம்களை முன்னிறுத்தி அடிவருடிகளுக்கு முன்னுரிமை வழங்கியதால் இம்முறை ஏழு பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்த தமிழ் தரப்பு நான்கு பிரதிநிதிகளை மாத்திரமே பெற்றுள்ளது.
இதன்மூலம் தமிழ் மக்களிடையே தமிழ் தேசியம் எனும் ஒன்றை வாயால் மட்டுமே பேசி அவர்களுக்கு உணர்ச்சியூட்டி அவர்களது இரத்தத்தை சூடாக்கி அதில் குளிர்காய்ந்த தமிழ் கூட்டமைப்பு தலைமைகளின் நயவஞ்சக செயல்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டினாலும் கல்முனையில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் தமிழ்மக்களின் பூர்வீக அரசியல் வரலாற்று அந்தஸ்தும் உரிமையும் மறக்க முடியாத ஒருதொய்வுநிலையைக் கண்டுள்ளமை தமிழ் தேசியத்துக்கு பெரும் பின்னடைவேயாகும்.
தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் அது பற்றிய மக்கள் கருத்தை அறியச்சென்ற போது கிடைத்த கருத்துக்களும் பதில்களும் எம்மை ஆச்சரியப்படவைத்தன. அதாவது வாழாவெட்டியாய் வீட்டில் இருப்பதைவிட மணவாழ்க்கையில் இணைவது நல்லது என்பதற்காக ஊரறிந்த திருடனையும் , முரடனையும், மூடனையும், கசடனையும், கையாலாகாதவனையும், கொண்டு வந்து மாப்பிள்ளையாய் காட்டினால் கண்ணை மூடி கழுத்தை நீட்ட நாங்களென்ன மரங்களா? சடப்பொருள்களா? என்றும் கூட்டமைப்பு தலைமைகளுக்கு கைகட்டி சேவகம் செய்யும் அடிமைகளும், சமுகத்தில் எட்டப்பர்களாக சந்தர்ப்பவாதிகளாக, எடுபிடிகளாக, மாமாக்களாக இருப்பவர்களும் எங்களுக்கு தலைவர்களாக இருப்பதை நாங்கள் அனுமதிப்போமா ? அதைவிட அந்த குட்டி சாத்தான்கள் இல்லாமலே எங்கள் தலைவிதியை நொந்து கொண்டிருப்போம் என கூறுகின்றனர்.
அதுமட்டுமல்ல வரப்போகும் மாகாணசபை தேர்தலின்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தகைய சுத்துமாத்து வேலைகளில் ஈடுபட நினைத்தால் விளைவு இதைவிடவும் மோசமாகிவிடும் எனவும் எச்சரிக்கின்றனர். இதன்விளைவே தமிழ் பிரதேசம்களில் 50 வீதத்திற்கும் குறைவான வாக்களிப்பும் கல்முனை மாநகர சபையில் ஏற்கனவே இருந்த இரு பிரதிநிதித்துவ இழப்புமாகும்.
மேலும் தமிழ்; தேசிய உணர்வினால் மேலோங்கி நின்ற கல்முனை தமிழ் மக்கள் இன்று தமிழ் தேசியத்தையே வெறுக்குமளவிற்கு கூட்டமைப்பினர் நடந்து கொள்வதாக புத்தி ஜீவிகள் கருதுகின்றனர். கல்முனை மாநகர சபை தேர்தல் களத்தில் கூட்டமைப்பு தலைமைகளின் நிலை இவ்வாறிருக்க, கொழும்பு மாநகர சபை தேர்தல் களத்தில் அவர்கள் நடந்து கொண்ட முறை தமிழ் சமுகம் ஓர் நன்றி கெட்ட சமூகம் என உலக அரங்கிற்கு உரத்து சொல்வதாக அமைந்துவிட்டது.
போராட்ட காலம்களில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தலைநகரிலும், தமிழ் பிரதேசம்களிலும் பல்வேறு கெடுபிடிகளுக்கு உட்பட்டு தவித்துக்கொண்டிருந்தபோது தமிழ் தலைமைகள் தங்களையும் தங்கள் உறவுகளையும் காப்பாற்றி கொள்வதற்காக இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் சரணாகதியடைந்து தலைமறைவாகியிருந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் சார்பாக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெனியிலும் வெளிநாடுகளிலும் குரல் கொடுத்த ஒரேயொரு தமிழ் இதயம் கௌரவ மனோ கணேசன் மாத்திரமே. இன்னலுற்ற தமிழ் மக்களுக்காக வடக்கு கிழக்குக்கு வெளியிலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருந்தால் அது நிச்சயம் மனோ கனேசனின் குரலேதான்.
இத்தகைய தன்மானத்தமிழன் தன் இனத்தின் இருப்பை பறைசாற்றவும் கௌரவத்தை காக்கவும் ஏணிச்சின்னத்தில் அணிதிரண்டு நின்றபோது கூட்டமைப்பு தலைமைகள் காலைவாரி விடுவதுபோல் நடந்து கொண்டவிதம் தமிழ் மக்களால் மன்னிக்க முடியாத வரலாற்று துரோகமாகவே கொள்ளப்படுகிறது. கொழும்பில் ஐ.தே.க. பிரசார மேடைகளில் இடிமுழக்கம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் தமிழ் மக்களை விழித்து கூறும்போது எமது அபிலாசைகளையும் நாம் எடுக்கும் முடிவுகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஆணித்தரமாக அடித்து கூறியதன் மர்மம் பேரினவாத கட்சியான ஐ.தே.க வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையே அமைந்த ரகசிய சுயநல ஒப்பந்தம்களே எனும் உண்மை இப்போது அம்பலமாகியுள்ளது.
...............................
0 comments :
Post a Comment