"பயங்கரவாதிகள் புகலிடமாக எந்த நாடும் இருக்கக் கூடாது'
"எந்த ஒரு நாடும், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கக் கூடாது,'' என, ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா வற்புறுத்தியுள்ளது. ஐ.நா., சபையில், பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டி அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, ஐ.நா., பாதுகாப்பு சபையில் நடந்த சிறப்புக் கூட்டத்துக்கு இந்தியா தலைமை தாங்கியது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், "பயங்கரவாதம் இன்னும் பல நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கிய பயங்கரவாதத்தால், சில பகுதிகளில் நல்லிணக்கம் பாழாகிறது' என்றார்.
இந்தியாவுக்கான ஐ.நா., தூதர் ஹர்தீப் சிங் குறிப்பிடுகையில், "எந்த ஒரு நாடும், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்க அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு தேவையான பணம், ஆயுதங்கள் மற்றும் அவர்களது செயலுக்கு துணையாக இருக்கக்கூடாது. பயங்கரவாதிகளை பரஸ்பர நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. அது ஒரு கிரிமினல் குற்றம்' என்றார்.
0 comments :
Post a Comment