Tuesday, October 18, 2011

இன்று நீர்கொழும்புக்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ இன்று முற்பகல் நீர்கொழும்பு நகருக்கு விஜயம் செய்தார். நீர்கொழும்பு – தளுபத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் இல்லத்திற்கே ஜனாதிபதி இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.

நேற்று திங்கட்கிழமை மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் வீடு விஷேட அதிரடிப்படையினரால் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ இன்று மேல்மாகாண அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று இது தொடர்பாக விசாரித்தார் இன்றைய தினம் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, மேர்வின் சில்வா, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

தனது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை ஒரு அரசியல் பலி தீர்ப்பு என்றும், தனது வீட்டில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனமொன்று இருப்பதாக தெரிவித்தே விஷேட அதிரடிப்படையினர் தேடுதல் நடத்தியதாகவும், தேடுதல் நடவடிக்கையின் போது எந்தவொரு சட்டவிரோத செயலுக்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்டவில்லை எனவும் மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஜனாதிபதியவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் இல்லத்திற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இதன் போது குழுமியிருந்தனர்.

மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் வீட்டில் போதைவஸ்த்து மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைஅடுத்தே விஷேட அதிரடிப்படையினர் அவரின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதாக “திவயின” சிங்கள தினசரிப் பத்திரகை இன்று முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் - எம். இஸட். ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com