கொலன்னாவ உமகிலிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற பாராத லக்ஷ்மனின் இறுதிக் கிரியை
முல்லேரியாவில் கடந்த 8ம் திகதி தேர்தல் தினத்தன்று இரு குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சண்டையில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாராத லக்ஷ்மனின் இறுதிக் கிரியை இன்று இடம் பெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் அன்னாரது பூதவுடல் கொலன்னாவையில் உள்ள வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கொலன்னாவ உமகிலிய விளையாட்டரங்கில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன் அவரது பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.
55 வயதான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர ஸ்ரீலங்கா மஹஜன கட்சி ஊடாக அரசியலில் நுழைந்தார். 1979ம் ஆண்டு கொலன்னாவை பிரதேச சபைக்குத் தெரிவான அவர் 1988ம் ஆண்டு ஸ்ரீலங்கா மஹஜன கட்சி ஊடாக மேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் பாராளுமன்றுக்கு பாரத தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்ரவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் கொலன்னாவ மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.பாதுகாப்பு பணிகளில் சுமார் 600 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி ப்ரொக்டர் கூறியுள்ளார்.
இது தவிர, இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படை வீரர்களும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சிவில் ஆடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளும் கொலன்னாவ பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக்கிரியை நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க,பிரதம மந்திரி ,ஜக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய,அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment