Tuesday, October 25, 2011

அவுஸ்திரேலியாவில் மஹிந்தவிற்கு செங்கம்பள வரவேற்பு

பொதுநலவாய சபையின் அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, அவுஸ்திரேலிய சென்றுள்ள ஜனாதிபதிக்கு, செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. பொதுநலவாய சபையின் அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, நாட்டிலிருந்து புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினர், இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல், அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரை சென்றடைந்தனர். ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக, விமான நிலையத்தில் விசேட வைபவம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேற்கு அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் மார்க் பிஷப் மற்றும் மேற்கு அவுஸ்திரேலிய பேர்த் வலய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. எலிசபத் பியட் ஆகியோர், ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்றனர். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க, உள்ளிட்டோர் உயர்ஸ்தானிகர் அலுவலக உத்தியோகத்தர்களும், இதில் இணைந்திருந்தனர்.

பொதுநலவாய சபையின் அரச தலைவர்களின் உச்சிமாநாடு, எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும். 54 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாய சபையில் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. பொதுநலவாய சபையில் அங்கததுவம் வகிக்கும் நாடுகள், ஜனநாயகம், சுதந்திரம, சமாதானம் உட்பட சகலருக்கும் சம உரிமைகளை வழங்க, அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. உணவு பாதுகாப்பு, நீடித்த நிரந்தர அபிவிருத்தி மற்றும் இயற்கை வள விருத்தி உள்ளிட்ட அங்கத்துவ நாடுகள் எதிர்கொண்டுள்ள தேசிய மற்றும் கோளமய சவால்கள் தொடர்பாகவும், இம்முறை மாநாட்டில் விசேடமாக கவனம் செலுத்தப்படும்.

உலக நிதி நெருக்கடியை வெற்றிகொள்ளல் உட்பட காலநிலை அழிவுகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலும், மாநாட்டில் விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளமை, குறிப்பிடத்தக்கது. அரச தலைவர்களின் மாநாட்டுக்கு மேலதிகமாக, சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு, வர்த்தக மாநாடு மற்றும் இளைஞர் மாநாடும் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதியமைச்சர் நியோமால் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும், ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் இணைந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com