Sunday, October 9, 2011

நீர்கொழும்பு ஆசிரியையின் மரணம் தொடர்பாக கணவனும் மனைவியும் கைது.

பேசியல் எனப்படும் அழகு கலைக்கு பயன்படுத்திய கிறீம் நஞ்சாகியதால் ஏற்பட்ட அவலம். மரணமடைந்த வாடிக்கையாளரை சாக்கில் கட்டிக்கொண்டு தெருவில் வீசினார் கணவர். மனைவி வாக்குமூலம்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட நீர்கொழும்பை சேர்ந்த ஆசிரியையின் மரணம் தொடர்பாக அழகு சிகிச்சை நிலையத்தின் உரிமையாளரும் அழகு கலை நிபுணரான அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனா.; நீர்கொழும்பு பிரதான வீதியில் கொப்ரா சந்தியருகில், நீர்கொழும்பு பிளாசா கட்டிடத்தில் அமைந்துள்ள அழகுசிகிச்சை நிலைய மற்றும் சலூண் உரிமையாளரான சரத் பெரேரா, அவரது மனைவியான லக்மினி பெரேரா ஆகியோரே வத்தளை பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

நீர்கொழும்பு லொயலா கல்லூரியின் ஆசிரியையான நீர்கொழும்பு தழுவ கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த சிறியாணி வாசனா (33 வயது) என்பவரே சம்பவத்தில் இறந்தவராவார் இவரின் சடலம் வத்தளை பிரதேசத்தில் மீட்கப்பட்டதை அடுத்து வத்தளை இரகசிய பொலிசார் நீர்கொழும்பு பொலிசாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து சந்தேக நபர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் சந்தேக நபர்களினால் திருடப்பட்ட ஆசிரியையின் நகைகள் அடகு வைக்;கப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டன.

24.9.2011 அன்று குறித்த ஆசிரியை பேசியல் செய்வதற்காக (அழகு சிகிச்சை) சந்தேக நபர்களின் சிகையலங்கார மற்றும் அழகு சிகிச்சை நிலையத்துக்கு வந்துள்ளார். இந்த சிகையலங்கார நிலையம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதம்களே ஆகின்றன. அழகு சிகிச்சைக்காக ஆசிரியையின் முகத்தில் கிறீம் ஒன்று பூசப்பட்டதையடுத்து சற்று நேரத்தில் அவர் மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த இந்நிலையில் அவரை பக்கத்து அறையில் கிடத்தி விட்டு வேறொரு வாடிக்கையாளருக்கும் பேசியல் செய்யப்பட்டுள்ளது. சில மணித்தியாலங்கள் கடந்து சந்தேக நபர்கள் இருவரும் அறையை திறந்து ஆசிரியையை பார்த்த போது அவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து ஆசிரியை அணிந்திருந்த நகைகளை கழற்றி விட்டு அவரது கைப்பையில் அடையாள அட்டை மூக்குக்கண்ணாடி உட்பட ஆவனம்களை எடுத்து தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் ஆசிரியையின் சடலத்தை பெரிய பையொன்றினுள் இட்டு மூடிவைத்துள்ளனர். வாடகைக்கு வாகனமொன்றை அமர்த்தி இரவு வேளையில் அந்த பையை வாகனத்தில் ஏற்றி வத்தளை பிரதேசத்தில் ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் கைவிட்டு வந்துள்ளனர்;.

ஆசிரியையின் செல்லிடத்தொலைபேசியை சந்தேக நபர்கள் தமது மகளுக்கு பயன்படுத்துவதற்காக கொடுத்துள்ளனர். இவ்விடயம்கள் இரகசிய பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது சந்தேக நபர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதோடு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com