Wednesday, September 21, 2011

ஃபேஸ்புக்கில் தூக்கி எறிந்த பாய் ஃபிரண்ட்...தூக்கில் தொங்கிய மாணவி!

தனது பாய் ஃபிரண்ட் தன்னுடனான நட்பை முறித்துக்கொள்வதாக ஃபேஸ்புக் இணைய தளம் மூலம் தெரிவித்ததை தாங்கிக் கொள்ள முடியாத எம்.பி.ஏ. மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரிலுள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஆ) கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வந்த மாலினி என்ற 22 வயது மாணவி ஒருத்தியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டாள்.

ஜர்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூரை சேர்ந்த மாலினிக்கு பெங்களூர் ஐஐஆ ல் இடம் கிடைத்ததை தொடர்ந்து, அவர் அக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயின்று வந்தார்.

கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கியிருந்து பயின்று வந்த மாலினிக்கு பாய் ஃபிரண்ட் ஒருவர் கிடைத்தார். அந்த பாய் ஃபிரண்டுடன் மிகவும் நெருக்கமாக பழகி, நட்பு பாராட்டி வந்தார் மாலினி.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த பாய் ஃபிரண்டுக்கும், மாலினிக்கும் ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.

இந்த சண்டையின்போது வார்த்தைகள் அதிகமாக வெளிப்பட்டுவிட, இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் கோபமாக திட்டிவிட்டு அவரவர் அறைக்கு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் அந்த பாய் ஃபிரண்ட், தனது ஃபேஸ்புக் இணையதளத்தில், கடந்த ஞாயிறன்று தமது கேர்ள் ஃபிரண்டுடனான நட்பை முறித்துக்கொண்டதாகவும், தான் இன்று மிகவும் மகிழச்சியாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த மாலினி மிகவும் மனமுடைந்துபோய், ஹாஸ்டலில் உள்ள தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

மாலினி ஹாஸ்டலில் தனி அறையில் இருந்ததால், அவள் தற்கொலை செய்துகொண்ட விடயம் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் மாலினி வகுப்புக்கு வராமல் இருப்பதை பார்த்த அவளுடன் படிக்கும் சக மாணவிகள், அவளது ஹாஸ்டல் அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்தனர்.

கதவு திறக்கப்படாமல் இருக்கவே, சந்தேகமடைந்த அவர்கள் ஹாஸ்டல் செக்யூரிட்டியை அழைத்து விவரத்தைக் கூறினர். அவர் வந்து அறைக் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தபோதுதான் மாலினி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்த தகவலறிந்து போலீஸார் அங்கு விரைந்துவந்து சடலத்தை இறக்கி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாலியின் லேப் டாப்பை திறந்து பார்த்தபோதுதான் பாய் ஃபிரண்ட் தன்னை கைவிட்டது குறித்தும், அதனால் தாம் தற்கொலை செய்துகொள்வதாகவும் மாலினி அதில் குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் மாலினியின் சடலம் தற்போது மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஜார்க்கண்டிலுள்ள அவளது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவம் குறித்து பெங்களூர் ஐஐஎம் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் அது குறித்து எதுவும் பேச மறுத்துவிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com