ரமேஷின் மனைவி தமிழ் மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்கிறார் ஷாவேந்திர சில்வா
ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் புலிகளின் முன்னாள் அம்பாறை மட்டு மாவட்ட தளபதி ரமேஷின் மனைவியினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நீதிமன்று ஷாவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை விடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்.
யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய அப்பாவி தமிழ் மக்களுக்கு புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷின் மனைவி நட்டஈடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார், கணவர் கேணல் ரமேஸினால் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு வத்சலாதேவி நட்டஈடு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு புலிகளின் குற்றச் செயல்களை உலகிற்கு அம்பலப்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்ட படைவீரர்களையும்- நாட்டின் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு தாம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு தரவுகளை திரட்டியுள்ளதாகவும் அவற்றை வெளிப்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வத்சலாதேவி தற்போது தென் ஆபிரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் தமக்கு எதிராக வத்சலா வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் நட்ட ஈடு வழங்குமாறு வத்சலா நீதிமன்றில் கோரியுள்ளமை நகைப்புக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு நிதி உதவிகளை வழங்கினர் என்பதனை நான் விரைவில் பகிரங்கப்படுத்துவேன். அத்துடன் அமெரிக்கப் படையினரால் பாரிய யுத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதிசக்திமிக்க தொடர்பாடல் சாதனங்கள் புலிகள் வைத்திருந்தனர். அது குறித்த தகவல்களையும் வெளியிடுவேன் என அவர் தெரிவித்தாக திவய்ன நாளேடு கூறுகின்றது.
சட்டத்தரணி விளக்கம்
இந்த வழக்கை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றத்துக்கு எப்படி அதிகாரம் வருகின்றது என்பதை வழக்கைத் தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி அலி பெய்தூன் லண்டன் பிபிசி யின் தமிழோசையிடம் விளக்கியபோது.
'அமெரிக்க பிரஜை அல்லாத ஒருவர், அமெரிக்காவுக்கு வெளியில் நடந்த தீங்கியல் சம்பவத்துக்காக வழக்குத் தாக்கல் செய்ய இந்த சட்டத்தின்படி இடமிருக்கிறது. இந்தசட்டத்தின்படி, வழக்கொன்றின் எதிராளி, அமெரிக்காவில் இருப்பாரானால் அவருக்கு எதிரான வழக்குக்கு அமெரிக்க நீதிமன்றத்துக்கு நியாயாயாதிக்கம் - அதாவது வழக்கை விசாரிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது.' என்று அவர் கூறினார்.
இறுதிக்கட்டப் போர்க்காலத்தில், அங்கு பொதுமக்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தினரை மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழிநடத்தியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய சட்டத்தரணி அவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாகவும் சட்டத்தரணி அலி பெய்தூன் கூறியுள்ளார்.
அதேநேரம் தமது சிவில் வழக்கு மூலம் இழப்பீட்டை கோருவதற்கு மட்டுமே வசதி இருக்கின்றது என்ற நிலையில், மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான நடவடிக்கையை அமெரிக்க அரசு மட்டுமே எடுக்கமுடியும் என்றும், அதற்காக அரச திணைக்களங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சட்டத்தரணி அலி பெய்தூன் மேலும் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment