Wednesday, August 17, 2011

உதயன் பத்திரிக்கை நிருபரின் தாக்குதலின் பின்னணியில் மேலுமொருவர் கைது.

தாக்குதல் பின்னணியில் பிரபல சட்டத்தரணி முடியப்பு ரெமிடியஸ்

உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர் ஞா: குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பில் மேலுமொருவர் சற்று முன்னர் யாழ் பஸ்தியான் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர் நிக்சன் அல்லது டிக்சன் எனப்படுகின்ற பிரதீபன் என தெரியவருகின்றது. யாழ் சுண்டுக்குளி பிரதேசத்தை சேர்ந்த இவர் இவ்விடயம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னவன் என்றழைக்கப்படும் ரட்ணசிங்கம் ரட்ணகுமார் (வயது-29) என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சின்னவன் யாழ் பிரதேசத்திலுள்ள பிரபல ரவுடி எனவும் பல சமூக விரோதச் செயல்களுக்கான வழக்குகள் யாழ் நீதிமன்றில் இவர் மீது பதிவாகியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் இவர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள தகவலில் தான் இத்தாக்குதலை யாழ் பிரபல சட்டத்தரணி முடியப்பு ரெமிடியஸின் உத்தரவின் பேரிலேயே செய்ததாக தெரிவித்துள்ளார்.

சின்னவன் யாழ் நீதிமன்றில் எதிர்கொள்ளும் வழக்குகள் யாவும் றெமிடியாசினால் இலவசமாக வாதாடப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இவ்வழக்குகளுக்கு வழங்கும் கட்டணமாகவே சின்னவன் றெமிடியாசின் கட்டளையை ஏற்று இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

மேலும் றெமிடியாஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளராக அறியப்பட்டுள்ளார். உதயன் பத்திரிகை தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றபோதும் இவர் இத்தாக்குதலுக்கு உத்தரவிட்டமைக்கான பின்னணி சரியாக வெளிவரவில்லை. இது தொடர்பான தெளிவான விபரங்களை ஒரிரு நாட்களில் தெளிவாகுமென நம்பப்படுகின்றது.

அதேநேரம் இச்சம்பவத்தின் பின்னணியில் பிரபல சட்டத்தரணி என்றபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா மீது சந்தேக பார்வைகள் திரும்பியிருந்தன. ஆனால் சம்பவத்திற்கும் சிறிகாந்தா அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com