Friday, August 26, 2011

செப்டம்பர் 9ம் தேதி பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கிலிடப்படுவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடப்படவுள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தகவல் மூன்று பேருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்து உத்தரவிட்டார்.

மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று கோரி பல்வேறு நாடுகளிலும், தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு இயக்கம் போல இதை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள தகவலை முறைப்படி உள்துறை அமைச்சகம், வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தது.

இதனால் மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. விதிமுறைப்படி, தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்ற உத்தரவு வந்த 7 நாட்களுக்குள் தண்டனைக்குரியவரை தூக்கிலிட வேண்டும். மூன்று தமிழர் விவகாரத்தில், நேற்று கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 2ம் தேதிக்குள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி மூன்று பேரும் தூக்கிலிடப்படவுள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதல் கட்டமாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரிடமும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை முறைப்படி சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் இன்று அவர்களை தூக்கிலிடும் தேதியை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுளள்ள மூவரில் பேரறிவாளன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

சிறைக்குப் பலத்த பாதுகாப்பு:
மூன்று தமிழர்கள் தூக்கிலிடப்படவுள்ளதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைக்கு வெளியே கமாண்டோப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள்ளும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார் பேரறிவாளன் தந்தை.
எனது மகன் பேரறிவாளன் உயிரை விடுவதற்கு முன்பே, நான் எனது குடும்பத்துடன் வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்து கொள்வேன். பொம்மை பேட்டரியை வாங்கிக் கொடுத்ததற்காக தூக்கா?. என்ன அநியாயம் இது?. முதல்வர் ஜெயலலிதாதான் எனது மகனைக் காபபாற்றித் தர வேண்டும் என்று பேரறிவாளனின் தந்தை குமுறல் வெளியிட்டுள்ளார்.

சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், சாதாரண பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பேட்டரியை வாங்கிக் கொடுத்ததற்கா எனது மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளனர். இது என்ன அநியாயம். செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 வருடமாக சிறையில் வாடி வருகிறான்.

எனது மகன் உயிரை விடுவதற்கு முன்பே, நானும், எனது குடும்பத்தினரும், வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவோம்.

எனது மகனை முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள்தான் காப்பாற்றி என்னிடம் தர வேண்டும். அவரால்தான் இது முடியும். அவரைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம் என்றார் கண்ணீர் மல்க குயில்தாசன்.

அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு தொடர வருகிறார் ராம்ஜேத்மலானி
தூக்கில் போடும் தேதியை வேலூர் சிறை நிர்வாகம் தங்களிடம் தெரிவித்ததைக் கேட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கான தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்ஜேத்மலானி திங்கள் கிழமை வழக்கு தொடர வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதையடுத்து அவர்களை தூக்கில் போடும் தேதியை வேலூர் சிறை நிர்வாகம் இன்று முடிவு செய்து மூன்று பேரிடமும் தெரிவித்தது.

சிறைக் கண்காணிப்பாளர் இன்று தூக்கிலிடும் தேதியை தெரிவித்தபோது மூன்று பேருமே அதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனராம். இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை திங்கள்கிழமை அவர்கள் நாடவுள்ளனர்.

கருணை மனுவை நிராகரித்ததை ரத்து செய்ய வேண்டும், தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரவுள்ளனர். இந்த அவசர மனு திங்கள்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வழக்கில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com