Saturday, July 2, 2011

சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative day) புன்னியாமீன்

சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை ‘கூட்டுறவே நாடுயர்வு” எனும் கருப்பொருளின் கீழ் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் கூட்டுறவுத்துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்பநோக்கும்போது தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும். நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்” சிந்தனையுன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும், கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவதில் தவறாகாது. எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு, கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன. சர்வதேச மாநாடு இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858), டாக்டர் வில்லியம்கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த இத்தத்துவம், 1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது. கூட்டுறவின் வரைவிலக்கணம் பின்வருமாறு: கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேச்சையான தொழில்முயற்சி ஒழுங்கமைப்பொன்றாகும். இதன் குறிக்கோள் தன்னிச்சையாக ஒன்றுகூடும் தனியாட்களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுபவிக்கின்றனர்.
‘மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. ‘நான்’ எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள்வதற்கும் உதவுகிறது’ இந்த அடிப்படையில் கூட்டுறவுத் தத்துவத்தின் பொது இயல்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

01. சேர்ந்து செயலாற்றுதல் (Associated Action)
02. சகலருக்கும் பொவுதான தன்மை (Universality)
03. தனிநபர் சுதந்திர விருப்பு (Free Will of the individual)
04. சமத்துவம் (Equality)
05. சனநாயகம் (Democracy)
06. சேவை நோக்கு (Service)
07. தனிநபர் சுதந்திரம் (Individual Freedom)
08. நடுநிலையும் சமூக நீதியும் (Equity and Social Justice)
09. கூட்டுணர்வு (Spirit of Solidarity)
10. புதிய சமூக ஒழுங்கு (New Social Order)
11. மனிதரின் அந்தஸ்தினை மதித்தல் (Rocognition of dignity of men)
12. உயர் ஒழுக்க நிலை (High moral standard)

இங்கிலாந்தில் நுகர்வோர் சங்கமாக உருவெடுத்த கூட்டுறவு அமைப்பு ஜேர்மனியில் கடன்சுமையைப் போக்கும் இயக்கமாக மாறி கடன் வழங்கும் சங்கங்களைத் தோற்றுவித்தது. உலகின் பல நாடுகளிலும் அவ்வந்நாட்டுத் தேவைக்கேற்ப உருவாகின. இவ்வாறு சர்வதேச ரீதியில் உருவான சங்கங்களை தொடர்புபடுத்தும் அமைப்பாகவும் வளர்ச்சியின் சின்னமாகவும் 1895இல் சர்வதேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளினதும் தேசிய மட்டக்; கூட்டுறவு நிறுவனங்களின் இணைப்பாக இது விளங்குகின்றது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது.

சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக யுத்தம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. நாடுகளின் உணவு உற்பத்தி, விநியோகம் என்பவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன். பொருளாதார அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்களின் வருமானம் அதிகரித்தது. இத்தகைய மாற்றங்கள் கூட்டுறவு அமைப்பிலும், சமூக பொருளாதார, கலாசார அமைப்புக்களிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. இதற்கமைய கூட்டுறவு கொள்கைகளும் மறுசீரமைக்கப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிபரிசுக்கமைய 1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை,

01. தன் விருப்புடனான தடையற்ற அங்கத்தவர்
02. ஜனநாயக முறைக் கட்டுப்பாடும், நிர்வாகமும்
03. முதலுக்கு ஏற்ப வட்டி வீதம்
04. இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல்
05. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியன.

நவீன காலத்தில் கூட்டுறவு விவசாயத்தால் விந்தை புரியும் இரு நாடுகளை உதாரணப்படுத்துவர். கியுபா பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் சிஐஏ (CIA) பலமுறை அவரை கொலை செய்ய முயன்றும் தோற்றது. இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

அடுத்தது 1948 ஆண்டு தோன்றிய இஸ்ரேல். தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டைநாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு இஸ்ரேல். இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் “டுலிப்” (Tulip) மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. சொட்டு நீர் பாசனம், பசுமை கூடம், மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும் தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),இமோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள்.

இலங்கையில் கூட்டுறவு முறை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
இலங்கை ஆங்கிலேயராட்சியில் இருந்தவேளை கிராமிய விவசாயம் புறக்கணிப்பட்டது. பெருந்தோட்டச் செய்கையில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக கிராமிய விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இயற்கையின் வரட்சி கிராமிய விவசாயிகளைப் பெருமளவு பாதித்து அவர்களை வறுமைக்குட்படுத்தியது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வழங்கும் முதலாளிகளிடம் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவுப் பண்புகளையுடைய சங்கங்களை அமைத்து செயல்பட்டபோதும் அதற்கு சட்டவரையறை இன்மையால் நிலைத்து நிற்கவில்லை. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை ஆளுநர் நாட்டிலிருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விவசாய வங்கித் தொழிற் குழுவின் விதப்புரையின்மீது அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்றாக 1911ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் நியதிகளின்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1911ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின்படி பதிவாளருக்கு கூட்டுறவுச் சங்சங்களைப் பதிவுசெய்வதற்கும் எவையேனும் வைபவங்களுக்குத் தலைமை தாங்குவுதற்கும் தத்துவமளிக்கப்பட்டது. எனினும் ஒரு முழுநேரப் பதிவாளர் அவசியமில்லை என அரசாங்கம் உணர்ந்தமையால் ஆரம்பத்தில் மேற்படி கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவாளருக்குப் பொறுப்பிக்கப்பட்ட ஒருசில கடமைகளையும் பணிகளையும் அரசாங்க அதிபருக்குக் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் கடமையும் அடங்கும்.

1904ஆம் ஆண்டில் கிராமிய சமுதாயத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை விவசாயச் சங்கம் எனப்படும் சங்கமொன்று இலங்கை ஆளுநரின்கீழ் தாபிக்கப்பட்டது. பிரசாரமும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளும் இச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. 1911ஆம் ஆண்டில் இலங்கை விவசாயச் சங்கங்களுக்குப் பதிலாக விவசாயத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒரு குறுகிய தவணை நடைமுறையாகும். பதிவுசெய்யும் வழமையான பணிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தமையால் விவசாயத்துறை பணிப்பாளரை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டுச் சபையொன்றையும் தாபித்தது.

ஆரம்பத்தில் நாணய சங்கங்களே பதியப்பட்டன. 1913/14ம் ஆண்டில் 35ஆக இருந்த சங்கங்கள் 1920/21இல் 154ஆக உயர்ந்தது. உறுப்பினர் தொகை முறையே 1820லிருந்து 17876 ஆகவும் அதிகரித்தது. 1921ம் ஆண்டின் 35ம் இலக்க சட்டத்திருத்தத்தின்படி ஏனைய வகைச் சங்கங்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டன. இதனால் நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் என்பன பதிவு செய்யப்பட்டன. 1939இல் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பங்கீட்டு அடிப்படையில் உணவு விநியோகிக்கும் பொறுப்பு கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல் உத்தரவாத விலைத்திட்டம், நெற்களஞ்சியங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. 1942 – 1945க் கிடையில் 4000க்கும் மேற்பட்ட நுகர்வோர் சங்கங்கள் இருந்தன. 1946இலிருந்து கூட்டுறவு விளைபொருள் உற்பத்தி விற்பனை சங்கங்கள் பதியப்பட்டன. 1949ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத்திருத்தத்தின் மூலம் நாணய உதவி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குடிசைக் கைத்தொழில்களிலும், பாரம்பரிய சீவனோபாய தொழில்களிலும் ஈடுபட்டவருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. (உ+ம்) கூட்டுறவுப் பாற்பண்ணை சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், தெங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள், நெசவுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள். தும்புத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், செங்கல், ஓடு உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள், அச்சிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள், பாதரட்சை செய்வோர் கூட்டுறவுச் சங்கங்கள், புகையிலை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றன.

1957இலிருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. 1958 முடிவில் இலங்கையில் இயங்கிய பல வகைக் கூட்டுறவுச் சங்கத்தினது எண்ணிக்கை 12852ஆகும். இவற்றைத் தவிர இரண்டாம்படிச் சங்கங்களாக கூட்டுறவுச் சங்கங்களும் இயங்கின. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு சேவை தொழிற்துறையினரிடையேயும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிக்கன கடனுதவிச் சங்கங்களும் (சணச) விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்கு முன்பே, 1904 ஆம் ஆண்டு தற்பொழுதுள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. சர். டி. ராசகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராக பொறுப்பேற்றார்.

இந்தியாவில் ஒரு விவசாய புரட்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காக காந்திஜி சொன்ன விடயம் கூட்டுறவுப் பண்ணை முறையாகும். ஒரு நிலத்தை நூறு துண்டுகளாக போட்டு விவசாயம் செய்து நிறைய கொள் முதலை எதிர்ப்பார்ப்பதை விட ஒரு கிராமத்திலிருக்கும் நூறு குடும்பங்கள் கூட்டாக விவசாயத்தில் ஈடுபடுட்டால் தனித்தனியாக கிடைக்கும் பலன்களை விட நிறையவே அதிகமாக இருக்கும் என்பது. நிலம் அனைத்தையும் ஒன்றாக உழுது விவசாயம் பார்ப்பதால் உழைப்பு, மூலதனம், கருவிகள் போன்றவை மிச்சமாகும். காந்திஜி இதையே விவசாய வேலைகள் என்றில்லாமல் ஆடு, மாடு வளர்ப்பு, காய்கறிகள் பயிரிடுவது என அனைத்து தொழில்களுக்குமே விரிவுபடுத்த நினைத்தார். காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் இதையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். நாடு சுதந்திரமடைந்தவுடன் காந்திஜியின் சிந்தனை பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் திட்டங்களாக தீட்டப்பட்டன.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர் கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார். ஏழைகள் தன்னந்தனியாக தங்களின் நலனுக்காக காரியத்தை செய்ய இயலாது. அவர்களோ கூட்டு முயற்சியை செய்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவு முறை வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டு வசதி, கதர், கிராமம் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்கு தாங்களே கூட்டாக, உறவாக அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.

1904 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவு சட்டம் 1961, 1963, 1983 என பல முறைகள் முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்து இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு ஆரோக்கியத்தோடு செயல்பட காரணமாக பலர் திகழ்ந்தனர். தூத்துக்குடியில் தொழிற் சங்கத்தைத் துவக்கிய வ.உ.சிதம்பரனார் கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார்.

கிட்டத்தட்ட 30,000 கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் திறம்பட செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் பேணப்படும். அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு உறுப்பினர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை உள்ள பல ஆயிரம் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பாலபாடத்தைப் போதிக்கும் போதி மரமாகும்.

சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது.

2000: “Co-operatives and Employment Promotion”
2001: “The Co-operative Advantage in the Third Millennium”
2002: “Society and Co-operatives: Concern for Community”
2003: “Co-operatives Make Development Happen!: The contribution of co-operatives to the United Nations Millennium Development Goals”
2004: “Co-operatives for Fair Globalisation: Creating Opportunities for All”
2005: “Microfinance is OUR business! Cooperating out of poverty”
2006 “Peace-building through Co-operatives.”
2007 “Co-operative Values and Principles for Corporate Social responsibility.”
2008: “Confronting Climate Change through Co-operative Enterprise”
2009: “Driving global recovery through co-operatives”

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com