Friday, July 1, 2011

மட்டுநகரில் இராணுவம் அவசரமாக கூடியது. தமிழ் குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளதாம்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடுபவர்கள் யாராகவிருந்தாலும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கான உத்தரவினை இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நான் வழங்குவேன் என்று கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை அவர்கள் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிடின் தேடி அழிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று மட்டக்களப்பு, திமிலைதீவு மக்கள் வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினைத் தொடர்ந்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு, டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

வங்கி முகாமையாளர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் இராணுவ, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவர்கள் முன் கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகமாகவுள்ள திமிலைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வங்கிக்கொள்ளையானது வெறுமனே சாதாரணமான ஒரு விடயமாகக் கருத முடியாது. கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளைகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கு காரணம் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்துகொண்டு ஆயுதங்களை பயன்படுத்திவரும் நபர்களேயாவர்.

இந்த ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பில் எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றினை நாங்கள் தேடியளிப்போம். நிச்சயம் வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்ட ஐந்து பேரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

இந்த நாட்டில் ஆயுதம் வைத்திருக்கக்கூடியவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரே. வேறு எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அவர்கள் யாராகவிருந்தாலும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் வீதித்தடைகளையும் ஏற்படுத்த வேண்டியேற்படும்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படும். இவற்றை எவராலும் தடுக்கமுடியாது. எந்த அரசியல் கட்சியாகவிருந்தாலும் சரி அவர்கள் எவராக இருந்தாலும் சரி யார் பிள்ளையாக இருந்தாலும் சரி பரவாயில்லை. நாம் நடவடிக்கையெடுப்போம். இங்கு சொல்லப்படும் சொல்லுக்கும் நான் பொறுப்பெடுக்கின்றேன்.

ஆரம்பத்தில் ஐந்து இயக்கங்களிடம் ஆயதங்கள் இருந்தன. பின்னர் அவர்களில் விடுதலைப்புலிகள் தவிர ஏனையவர்கள் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்தனர். இறுதியில் விடுதலைப்புலிகளும் அழிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் பயங்கரவாதத்துக்கு இடம் கிடையாது. அபிவிருத்திக்கும் சுதந்திரத்துக்கும்தான் இடமுண்டு.

மனதில் உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு சமாதானத்துக்கு துணைநிற்பவர்கள் போல் நடிக்க முடியாது. அவ்வாறு நடிப்பவர்களை எமக்கு தெரியும். எமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனைபவர்களை தேடி அழித்தே ஆகுவோம்.

அபிருத்திக்கோ, சமாதானத்துக்கோ குந்தகம் விளைவிக்கும் சம்பவம் இருந்தால் அதுபற்றி அறிவிக்க வேண்டும். அறிவிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். 24மணி நேரமும் நாங்கள் பாதுகாப்பிற்காக கஸ்டப்படுகின்றோம். ஆனால் ஆயுதம் தரித்த ஐந்து பத்துப்பேர் அவற்றினை சீர்குலைத்து வருகின்றனர்.

நான் பொலன்னறுவை உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்கள் இணைந்ததான பாதுகாப்பிற்கு பொறுப்பாகவுள்ளேன். இந்த மாவட்டங்களில் மட்டக்களப்பிலேயே அதிகளவிலான கொள்ளை, கொலை, கப்பம் கோருதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களாக இருந்தவர்கள் வியாபாரிகளிடம் கப்பம் பெற்றுக்கொண்டு சொகுசாக வாழ்ந்துவந்தார்கள். அந்த நிலை குறைந்திருந்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக வன்முறைச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து சில அரசியல் கட்சிகளின் பின்புலம் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.
திமிலைதீவில் இடம்பெற்ற இந்த வங்கிக்கொள்ளையானது அந்த வங்கியில் காணப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இடம்பெறாமையும் ஒரு காரணம் என நான் அறிகின்றேன்.

ஏற்கனவே களுவாஞ்சிகுடியிலும் இவ்வாறான வங்கிக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களை பிடித்ததுடன் ஒருவரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். பிடித்தவர்களிடம் இருந்து 30 இலட்சம் ரூபா பணத்தினையும் மீட்டுள்ளோம். இதேபோன்றுதான் இந்தக்கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களையும் நாங்கள் விரைவில் பிடிப்போம்.

வங்கி முகாமையாளர்கள் வங்கி பாதுகாப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளையும் பலப்படுத்த வேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் இன்றில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேலாக இராணுவத்தினரின் பாதுகாப்பை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும்போது அதனை தெரியப்படுத்துவதற்கான தந்திரோபாயங்களை வங்கியில் மேற்கொள்ள வேண்டும். அவற்றில் அபாய ஒலிகளை எழுப்பக்கூடிய சமிக்ஞைகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதனை முகாமையாளர் தாம் இருந்தவாரே எவருக்கும் தெரியாதவாறு எழுப்புவதற்கான ஒழுங்கிணை செய்ய வேண்டும். அந்த அபாய ஒலியானது வங்கியின் சுற்றுப்புறத்தில் நூறு மீற்றருக்காவது கேட்கக்கூடியவாறு அமையவேண்டும். இன்றில் இருந்து வங்கிக்குள் எந்த வாகனமும் உட்செல்ல அனுமதிக்ககூடாது. வங்கி முகாமையாளர் உட்பட பாதுகாப்பு தரப்பினரின் வாகனங்களும் உட்செல்லமுடியாது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.

வங்கிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பாதுகாப்பு கமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் வங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அருகில் இருக்கும் வீட்டு உரிமையாளர்களுடன் உறவுகளைப் பேண வேண்டும். அவர்களை மாதம் ஒரு முறையாவது அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாக பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும்.

வங்கிகள் தங்களது பாதுகாப்புக்களை தாங்களே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களது பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்டே பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டும். பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினர் சார்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் மகிந்த முதலிகே, மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கரவிட்ட மற்றும் படை உயர் அதிகாரிகள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈரோஸ், டெலோ, புளொட், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com